loader
காரணமே சொல்லாமல் முடக்குவது நியாயமா?  நடுத்தெருவில் நிற்கவேண்டுமா?

காரணமே சொல்லாமல் முடக்குவது நியாயமா? நடுத்தெருவில் நிற்கவேண்டுமா?

(வெற்றி விக்டர்)

 

கோலாலம்பூர் மே 21-

 

உணவகத் துறைக்கு ஒரு சில காரணங்களைக் கூறி, அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு  விண்ணப்பத்தை நிராகரித்து வந்த அரசு, கடந்த 10 வருட காலமாக எந்த ஒரு காரணத்தையும் வழங்காமல், தங்கள் துறைக்கு அந்நிய தொழிலாளர்களை வழங்காமல் முடக்கியுள்ளதாக மலேசிய முஸ்லிம் மொத்த, சில்லறை விற்பனையாளர் சங்கத்தினர் (மாவார்) தெரிவித்துள்ளனர்.

 

தேசிய முன்னணி அரசுடன் பல வருடங்களாகப் போராடித் தீர்வு கிடைக்காத பட்சத்தில், புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தோம் . ஆனால் அவர்களுடைய செயலும் எங்களை நம்பிக்கை இழக்க வைத்துள்ளது . அதிலும் சில அமைச்சர்களின் ஆலோசனை, 'போகாத ஊருக்கு வழி சொல்வது' போல் உள்ளது என மாவாரின் ஆலோசகர் பஷிர் அஹ்மட் தெரிவித்தார்.

 

நாடு தழுவிய நிலையில் சுமார் 1800 மளிகைக் கடைகள் (மினி மார்கெட்) வைத்திருப்பவர்கள் மாவார் உறுப்பினராக உள்ளனர்.

கடந்த 10 வருடங்களாக இத்துறைக்கு அந்நிய தொழிலாளர்களைக் கொண்டு வரும் முயற்சி முடக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் .

ஆனால் 20 -24 மணிநேரம் செயல்படும் பெறுநிறுவனங்களுக்கு எப்படி அந்நிய தொழிலாளர்கள் தருவிக்கப் படுகிறது? அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? எனக் கேள்வி எழுப்பிய பஷிர் அஹ்மட், நாங்களும் அவர்களைப் போல்தான் முறையாகத் தொழிலை நடத்துகிறோம், பிறகு ஏன் இந்த ஓர வஞ்சனை? என்பதை அரசு விளக்க வேண்டும்.

இந்த நாட்டின் முதுகெலும்பே சிறு நடுத்தர வியாபாரிகள்தான் என்பது அரசுக்குத் தெரியும். இந்த அரசு புதிய அரசுதான், அமைச்சர்களும் புதியவர்கள்தான், ஆனால் ஒரு வருடம் ஆகியும் அவரவர் துறை சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளாமல், வெறும் சாக்குப் போக்கு சொல்லி தப்பித்தால், நாங்கள் வியாபாரத்தை விட்டு விட்டு நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். இதைத்தான் இந்த அரசு விரும்புகிறதா?

இனி இத்துறையில் பெருநிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டால் போதும் என அரசு விரும்புகிறதா? அதனால்தான் எங்களுக்கு இந்தத் தண்டனையா?

 

5000 பேருக்கும் மேல் விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர் கேட்கும் பொருள்களை எடுத்துக் கொடுப்பதற்கு, கடைகளுக்கான மற்ற வேலைகளுக்கு என எங்களுக்கு ஆட்கள் நிச்சயம் தேவை. இந்த வேலைகளுக்கு உள்நாட்டவர்  வர மறுக்கிறார்கள். அது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது? என்பதுதான் எங்களுக்கு விளங்கவில்லை.

 

இது தொடர்பாக பல அமைச்சுகளுக்குச் சென்று மகஜர் வழங்கியுள்ளோம். பல அமைச்சர்களைச் சந்தித்துள்ளோம். ஆனால், ஒரு பயனும் இல்லை. இன்னும் காலில் விழாததுதான்  மிச்சம் என பஷிர் அஹமட் தெரிவித்தார்.

 

நாங்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். எங்கள் குறையைத் தீர்க்க வேண்டும். ஒருவேளை இத்துறை மீதான அக்கறை அரசுக்கு இல்லை என்றால், எங்கள் கடைகளை மூடிவிட்டு, பாதுகாவலர் வேலைக்குச் சென்று பிழைப்பை நடத்திக்கொள்கிறோம்.  

நாங்கள் இத்துறையை விட்டு விலகினால், பாதிக்கப்படப் போவது அரசும் மக்களும்தான். காரணம்,  இந்த வியாபாரத்தைக் கையில் எடுக்க வங்காளதேசிகள் தயார் நிலையில் இருக்கிறார்கள். இப்பவே அவர்கள் சட்டவிரோதமாக ஆட்களைத் தருவித்துக் கடைகளை நடத்தி வருகிறார்கள். இத்துறை அவர்கள் வசம் சென்றால், அரசுக்கு வரியும் இல்லை, சட்ட விரோத வாசிகளின்  எண்ணிக்கையும் உயர்ந்துவிடும். அதோடு, பெருநிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்தால், விலைவாசியை அவர்கள் நிர்ணயிப்பார்கள். இதனால் மக்கள் அவதிப்படுவார்கள். எங்களைப் போன்ற சிறு வியாபாரிகள் எல்லாம் கடையை அடைத்தால், இந்த நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் பாதிப்படையும். இதைத்தான் அரசு விரும்புகிறதா? என பஷிர் அஹ்மட் கேள்வி எழுப்பியுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News