loader
சென்னை ‘போத்தீஸ்’  உள்பட சில கடைகள் மூடப்பட்டுவிட்டன! அபாயத்தில் இந்திய வியாபாரத் துறை!

சென்னை ‘போத்தீஸ்’ உள்பட சில கடைகள் மூடப்பட்டுவிட்டன! அபாயத்தில் இந்திய வியாபாரத் துறை!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே-17

தலைநகர், லெபோ அம்பாங்கில் உள்ள பல இந்திய பாரம்பரிய கடைகள் அந்நிய தொழிலாளர் பற்றாக்குறையினால்  மூடு விழா கண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பிரபலமான ஜவுளி மாளிகையான சென்னை  ‘போத்தீஸி’ன், லெபோ அம்பாங் கிளை கடையும்  அந்நிய தொழிலாளர் பற்றாக்குறையால் அடைக்கப்பட்டு, தற்போது அந்தக் கடை வெறிச்சோடிக் கிடப்பதுதான் உச்சக்கட்ட சோகம்.

அதுமட்டுமன்றி அப்பகுதியில் உள்ள ‘லக்ஷ்மி விலாஸ்’ உணவகம் , அப்துல் ரசாக் நகைக்கடைக்கு அருகே உள்ள பத்து பஹாட் நகைக்கடை, இன்னும் சில உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலை நீடித்தால் மேலும் பல கடைகள் மூடப்பட்டு, இந்தியர்கள் பலர் தங்கள் சுய தொழிலை கைவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்பதே வர்த்தகர்களின் கவலையாய் இருக்கிறது.

அந்நிய தொழிலாளர் பற்றாக்குறையால் சென்னை போத்தீஸ்  நிறுவனம் லெபோ அம்பாங் கிளை உட்பட, மேலும் ஆறு கிளைகளை மூடியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும்,  பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் பார்வைக்கு இப்பிரச்னையைக் கொண்டு செல்லப் போவதாகவும் வணிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பல வணிகர் சங்கங்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நாட்டில் இந்தியர்கள் தொழில்துறையில் மிளிர வேண்டும் என்பதே சமுதாயத்தின்  நோக்கம். நம் வணிகர்கள் எதிர்நோக்கும் பிரச்னையால், தொழில் துறையில் இருக்கும் சிறிய எண்ணிக்கையிலான தொழில்முனைவர்களும் காணாமல் போய் விடுவார்கள் என்கிற அச்சம் நிலவுகிறது. அரசியலுக்கு அப்பால், அனைத்து இந்திய தலைவர்களும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்திய பாரம்பரிய வியாபாரத் துறைக்கு ஏற்பட்டுள்ள அபாயத்திற்குத் தீர்வு காண முன்வரவேண்டும் என்பதே வணிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

0 Comments

leave a reply

Recent News