loader
உருட்டல் மிரட்டலுக்குப் பிரதமர் அஞ்சமாட்டார்! - மைக்கி

உருட்டல் மிரட்டலுக்குப் பிரதமர் அஞ்சமாட்டார்! - மைக்கி

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே-15

அந்நிய தொழிலாளர் விவகாரம் தொடர்பாக, தற்போது வர்த்தகச் சங்கங்கள் ஒன்றுகூடி பிரதமர் அலுவலகத்திற்கு முன் கருப்புக் கொடி  காட்டி அமைதி மறியல் நடத்தப் போவதாக அறிவித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய  மைக்கி' தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் "இது சரியான அணுகுமுறை இல்லை" என ' தமது கருத்தினை வெளியிட்டுள்ளார் .

வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள், அவர்களது நிலைமை  அதனால் எழுந்துள்ள ஆதங்கம்  அனைத்தும் நியாமானதுதான். இதற்கு, மைக்கியும் எப்போதும் துணை நிற்கும். ஆனால், வீதியில் கருப்புக் கொடி காட்டி அமைதி மறியல் நடத்தும் அணுகுமுறையால், யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. ஆகையால், வர்த்தகர்கள் சற்று அமைதி காக்கும் படி டத்தோ கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

94 வயதான நமது பிரதமர் துன் டாக்டர் மகாதீர், அரசியல் சாணக்கியர். அவரைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். அவரிடம் உருட்டல் மிரட்டல் எல்லாம் செல்லாது. அதற்கெல்லாம் அவர் அஞ்சவும் மாட்டார் என்பதை, வர்த்தகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆதங்கத்தில் அவசரப்பட்டு நாம் எடுக்கும் முடிவால், பாதிப்பு நமக்குத்தான் ஏற்படும் என்றார் அவர்.

மைக்கி பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா கூறுகையில், மைக்கி உள்துறை அமைச்சர்  டான் ஸ்ரீ முகிடீன் யாசின், மனிதவள அமைச்சர் குலசேகரன், உள்நாட்டு வணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அதோடு உள்துறை அமைச்சருடன் இப்பிரச்னையைக் களைய தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். வெண்ணை திரண்டு வருவதற்குள் தாழியை உடைத்துவிடாதீர்கள் என வர்த்தகர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்னையை நாம் நீண்டகாலமாக முந்தய அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் இருந்து எதிர்நோக்கி வருகிறோம். பக்காத்தான் அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் உள்நாட்டவருக்கே முன்னுரிமை என்பதும், உள்நாட்டு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதும்தான்  இலக்காக உள்ளது. இருந்தபோதும் நாம் எதிர்நோக்கும் பிரச்னைக்குச் செவிசாய்த்து, மனிதவள அமைச்சு பல கலந்துரையாடல்களை மாநில ரீதியில் நடத்தி, இப்பிரச்னையைக் களைய ஆய்வு செய்து வருகிறது.

நாம் கொஞ்ச காலம் அமைதியாக இருந்தால், நல்ல தீர்வு பிறக்கும். இப்போதுள்ள அரசியல் சூழலில், நாம் அவசரப்பட்டு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு, அதைச் சிலர் தங்களது அரசியல் ஆதாயமாக்கிவிடக்கூடாது. அதனால் வர்த்தகர்கள் சற்று அமைதி காக்க வேண்டும் என, டத்தோ கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்!

0 Comments

leave a reply

Recent News