loader
இன்னும் எத்தனை காலம்தான்  கடைகளை அடைத்து வைத்துக் காத்திருப்பது?

இன்னும் எத்தனை காலம்தான் கடைகளை அடைத்து வைத்துக் காத்திருப்பது?

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே -14

அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையால் பல இந்தியத் தொழில்முனைவர்கள் தத்தளித்து வருவதால், தொழில்கள் முடங்க ஆரம்பித்துள்ளன. ஆனால், இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண வேண்டிய மனிதவள அமைச்சு, இன்னும்  ஒரு நல்ல பதிலை வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என,  மலேசிய இந்திய சிகை அலங்கார உரிமையாளர் சங்கத் தலைவர் டாக்டர் மகேந்திரன் தெரிவித்தார்.

பல மகஜர் வழங்கியும் இன்னும் தீர்வு பிறக்கவில்லை எனவும், தங்களின் பாரம்பரியத் தொழிலை அழித்துவிட வேண்டாம் எனவும் சங்கச் செயலாளர்  ராஜ சேகரன் வருத்தத்துடன் கூறினார்.

சிகை அலங்காரத் துறையைப் பொருத்தவரை இதுவரை 30 விழுக்காடு கடைகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கடைகளுக்கு வாடகை மட்டும் செலுத்தி வருகிறோம் எனக்  கூறிய ராஜசேகரன், இன்னும் எத்தனை காலம் இப்படிக் கடைகளை அடைத்து வைத்துக் காத்திருப்பது என்ற கேள்வியையும் எழுப்பினார். தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1996-ல் துன் சாமிவேலு , பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடம் பேச்சு வார்த்தை நடத்தி  பல இந்திய வர்த்தகர்களுக்கு அந்நியத் தொழிலாளர் அனுமதியைப் பெற்றுத் தந்தார். அது மட்டுமின்றி சிகை அலங்காரத் துறைக்குச்  சிறப்புக் கடன் உதவியும் பெற்றுத் தந்தார்.  பின்னர் அது சிகை அலங்காரத் துறைக்கான அரசு உதவி நிதியாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஒரு அமைச்சர் எங்கள் பிரச்னையை அமைச்சரவையில் பேசினார். இப்போது அதே பிரதமர்தான், ஆனால் 4 இந்திய அமைச்சர்கள் இருந்தும்,  எங்கள் பிரச்னைக்கு முடிவு சொல்லாமல் காலத்தைக் கடத்துகின்றனர்.

நாங்கள் எங்கள் பாரம்பரியத் துறையைக் காப்பாற்ற பாடுபடுகிறோம். எங்கள் பிரச்னைக்கு விரைந்து அரசு தீர்வு காணவேண்டும். இனியும் காத்திருக்கமுடியாது.
எங்கள் பிரச்னைக்குத் தீர்வு பிறக்காவிடில் பிரிஸ்மா தலைவர் அயூப் கான் சொன்னதுபோல், பிரதமர் அலுவலகம் முன் அமைதிப் போராட்டம் வெடிக்கும் என சிகை அலங்கார உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் ஒரு மனதாகத் தெரிவித்தனர்.
பாரம்பரியத் தொழிலை அழித்து விடாதீர்கள் என, அரசாங்கத்திடம் வேண்டுகோளையும் விடுத்தனர்!

0 Comments

leave a reply

Recent News