loader
இன்னொரு கதை சொல்லட்டா மிஸ்டர் சி.கே!

இன்னொரு கதை சொல்லட்டா மிஸ்டர் சி.கே!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே 13-

"மலேசியத் திரைப்படம் என்பதற்காகத் தரமில்லாத படங்களை உயர்வாகப் பேசி 100 புள்ளிகள் வழங்கும் வகையில், ஊடகங்களின் செய்திகளும் இருந்தால் மலேசியத் திரைப்படத்தின் தரத்தை எதிர்பார்க்க முடியாது. தரமான படத்திற்கு  ஆதரவு வழங்க வேண்டும், தமிழ்நாட்டில்  'ஆனந்த விகடன்' போன்ற இதழ்கள் தரத்திற்கு முக்கியத்துவம் வாழங்குவார்கள்.... யார் நடித்தது? யார் இயக்கியது? என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். தரமே முக்கியம் என்பதுபோல் அவர்களது திரை விமர்சனம் இருக்கும். இந்த நடைமுறையை மலேசிய ஊடங்கள் பின்பற்ற வேண்டும்" என்று 'ஒரு கதை சொல்லட்டா சார்' திரைப்படத்தின் முன்னோட்ட  அறிமுக விழாவில் 'மண்ணின் மைந்தன்' கூறியுள்ளார்.

டி.ராஜேந்தர் போல், மலேசியாவில் கதை திரைக்கதை, வசனம், இயக்கம் நடிப்பு, தயாரிப்பு என அனைத்திலும் கைதேர்ந்த மலேசியக் கலைஞரான சி.கே எனும் சி.குமரேசன் இப்படியான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

'ஒரு கதை சொல்லட்டா சார்' நிகழ்ச்சியில் ஒரு கதையைச் சொன்ன தங்களுக்கு,
நான் ஒரு கதையைச் சொல்லட்டா மிஸ்டர் சி.கே சார்?
என் பெயர் வெற்றி விக்டர். ஞாபகம் இருக்கிறதா?  நீங்கள் உட்பட மலேசியக் கலை உலகில் பலருக்கும் என் பெயர் தெரியும், ஆனால், என்னைத் தெரியாது . காரணம் நான் மலேசியக் கலைஞர்களின்  திறமையைப் பார்த்தேன், ரசித்தேன், இன்னும் ரசிப்பேன், அவர்களை ஆய்வு செய்வேன்,  கட்டுரை எழுதுவேன் அவ்வளவுதான்.
கலைஞர்களின் திறமை பற்றி ஒரு கட்டுரை வரும்போது, அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி  பிறக்கும். நான் எழுதிய கட்டுரையின் நட்சத்திரங்கள் முகநூலில் அந்தக் கட்டுரையைப் போட்டு நன்றி சொல்வார்கள். இவ்வளவுதான் எனக்கும், கலைஞர்களுக்கும் உள்ள உறவு. அதில் நீஙகளும் ஒருவர்தான். இதைத் தைரியமாக நான் எழுதுவதற்குக்  காரணம், கலைத்துறையினரிடம் விசாரியுங்கள் உண்மை வெளிப்படும்  சி.கே சார்.

இன்னொரு கதை சொல்லட்டா  சி.கே சார். '2014 ஆகஸ்ட் மாதம்  நடிகர்  சூர்யாவின் திரைப்படம் வெளிவந்தபோது, ''மைந்தன்' என்ற ஒரு மலேசியக் கலைஞனின் படம் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் போய் அப்படத்தைப் பார்க்கவேண்டும். மலேசியக் கலைஞர்களை அடுத்தக் கட்ட நிலைக்குத் திரை உலகில் கால் பதிக்க வைக்கும் படம். நம் மக்களின் ஆதரவு இல்லை எனில், படத்தைத் திரையரங்கில் இருந்து எடுத்து விடுவார்கள். மலேசியக் கலைஞருக்கு ஆதரவு கொடுங்க' என்று அப்படத்தைப் பற்றி விமர்சனம் எழுதியிருந்தேன். அப்படித் தவறாக எழுதியதற்கு மன்னித்து விடுங்கள் மிஸ்டர் சி.கே. அன்று நாங்களும் 'ஆனந்த விகடன்' போல் நடந்திருக்க வேண்டும். அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

இப்படி ஒவ்வொரு கலைஞனின் படைப்புகளும் திரை அரங்கில் இருந்து எடுக்கப்படும் அபாயம் ஏற்படும்போது, மக்களே நம் கலைஞர்களுக்குத் தோள் கொடுங்கள் என்று எழுதியதற்கு மன்னிக்கவும். 

நாங்கள் கண்டிப்புடன் திரை விமர்சனத்தை எழுதியிருக்க வேண்டும் மன்னிக்கவும். 'மயக்க'மாக ஒரு பேய் படத்தை நீங்கள்  எடுத்தபோது, நம் நாட்டுக் கலைஞர் என்று மயங்காமல்,  உங்களின் அந்த  'மயங்காதே' திரைப்படத்திற்குத் தாங்கள் சொல்வது போல் திரை விமர்சனம் எழுதியிருக்கவேண்டும்... அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இனி திரை விமர்சனம் நீங்கள் சொன்னதுபோல் அனல் பறக்கும். அதையும் சொல்லிக் கொள்கிறேன் அன்புடன். இம்முறை வெளியே திறமையை வைத்துக்கொண்டு வாய்ப்புக் கிடைக்காமல் இருக்கும் நணபர்களுக்காகக் கொஞ்சம் பேசுவோம். முதலில் டி.வி பிரபலம், வானொலி பிரபலங்களை மையமாகக் கொண்டு திரை உலகம் செயல்படுவதைத் தவிர்க்கவும். ஆடிஷன் வைத்துத் திறமையைத் தேடுங்கள் .

யூடியூப்பில் 72 லட்சம் ரசிகர்களை ஈர்த்த முகேன் ராவ் என்ற கலைஞர், இப்ப உள்ள காலகட்டத்தில்  ஒரு  நாயகனுக்கான  சிறந்த தேர்வு. இதையும் அந்தக் கலைஞனை ஆய்வு செய்து வருவதால் நான் கூறுகிறேன். அவரிடமும் விசாரியுங்களேன். நிச்சயம் அவருக்கும் என்னைத் தெரியாது.காரணம்  பத்திரிகையாளருக்குப் படைப்புதான் முக்கியம். ஆனால்,  இது நீங்கள் மேடையில் சொன்ன படைப்பு கிடையாது. படம் தரமா? தரமில்லையா? என்பதைப் பார்க்கும் ரசிகர்கள் முடிவு செய்வார்கள்.  இங்கு ஒரு பத்திரிகையாளன் செய்யவேண்டிய கடமை, அத்திரைப்படத்தின் உழைப்பு, திரைக்குப் பின்னால் இருந்த வியர்வையை மக்களிடம் சேர்ப்பதுதான். அதைத்தான் இவ்வளவு காலம் செய்தோம், இத்துறை வாழவேண்டும் என்பதற்காக. படத்தைப் பற்றிய புள்ளிகளை ரசிகர்கள் தருவார்கள். அவர்கள் குறை நிறைகளை உள்வாங்கி  எந்த ஒரு கலைஞன் தன்னை செதுக்குகிறானோ அவரே வெற்றிக் கலைஞனாய் வலம் வருவார்.

அந்த வகையில் உங்கள் குற்றச்சாட்டை நான் ஏற்கிறேன். வளரும் கலைஞருக்கு, பிரபலமான கலைஞர்களின் படைப்புக்கு இனி நீங்கள் சொல்வதுபோல், 'ஆனந்த விகடன்' போல எழுத கண்டிப்பாக  முயற்சி செய்வேன்.

இனி திரைவிமர்சனம், மூத்தக் கலைஞர்களின் படைப்பு தொடர்பான விமர்சனம் எல்லாம் நிச்சயம் அனல் பறக்கும்!

1 Comments

  • Thennarasu sinniah
    2019-05-13 19:04:10

    நேர்மையான விமர்சனம் தான் வேண்டும் என சொல்வார்கள்...அப்படி கூறினால் தாங்க மாட்டாங்க.. ஒரு படம் எடுத்து பாருங்கனு நமக்கே சவால் விடும் காலம் இது.. ரசிகனே முடிவு செய்யட்டும்...

leave a reply

Recent News