loader
இறுதி ஆட்டத்தில்  லிவர்பூல் - டோட்டன்ஹம்! அந்தக் கடைசி நிமிட விசிலுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் - டோட்டன்ஹம்! அந்தக் கடைசி நிமிட விசிலுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

(சசிதரன் தர்மலிங்கம்)

நெதர்லாந்து மே 9-

ஐரோப்பிய வெற்றியாளர்கள் லீக் கிண்ண இறுதி ஆட்டத்திற்கு நுழைய வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த லிவர்பூல் அணி, நேற்று அதிரடியாக பார்செலோனாவை வீழ்த்தி அந்தக் கனவை நிறைவேற்றியுள்ளது.

இன்று அதிகாலை அஜெக்ஸ் அரங்கில் நடந்த மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் கனவா? இல்லை நிஜமா? என்று நினைக்கும் அளவிற்கு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 90-வது நிமிடம் வரை இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அஜெக்ஸ்  அணியிடம் இருந்தவேளை, அந்த இறுதி நிமிடம் செலுத்தப்பட்ட கோல் சரித்திரத்தை மாற்றி எழுதியது.

கடந்த வாரம் டோட்டன்ஹம் தனது சொந்த அரங்கில் அஜெக்ஸிடம் 1-0 என்று தோல்வி கண்ட நிலையில், இன்று அதிகாலை நடந்த 2-வது அரை இறுதி ஆட்டத்தில், 5-வது நிமிடம், 35-வது  நிமிடங்களில், அஜெக்ஸ் கோல்களைப் புகுத்தி  3-0 என்று தங்களது முன்னிலையை வலுவாக்கியது.

முதல் பாதி ஆட்டம் அஜெக்ஸ் வசம் இருந்தாலும், பிற்பாதி ஆட்டத்தின் போது டோட்டன்ஹம் ஆட்டக்காரர் லுகாஸ் மோரா 55 - 59-வது நிமிடங்களில் அடித்த கோல் டோட்டன்ஹம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

2-2 என்ற நிலையில் அந்த ஆட்டம் சமநிலை கண்டாலும், தனது சொந்த அரங்கில் அஜெக்ஸுக்கு வெற்றியைத் தந்த அந்த ஒரு கோல், அவர்களை  முன்னிலையில் வைத்திருந்தது.

கடுமையான முயற்சிக்குப் பிறகு, ஆட்டம் முடிவடையச் சில நிமிடங்களே எஞ்சியுள்ள தருணத்தில், லுகாஸ் மோரா அடித்த அந்த முன்றாவது கோல், எதிரணி அரங்கில் டோட்டன்ஹமிற்கு வெற்றியைத் தந்தது .

இவ்விரு ஆட்டத்தை ஒப்பிடுகையில் 3-3 என்ற கோல் எண்ணிக்கையில், இரு அணிகளும் சமநிலை கண்ட வேளையில், எதிர் அணியின் அரங்கில் அதிகமான கோல்களைப் புகுத்திய டோட்டன்ஹம் இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றது.

இம்முறை இங்கிலாந்தைச் சேர்ந்த இரு அணிகள் ஐரோப்பிய வெற்றியாளர்கள் லீக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவதால், இம்முறை அக்கிண்ணம் இங்கிலாந்தை நோக்கிச் செல்கிறது என்பது உறுதியாகிறது.

கடும் போராட்டத்திற்குப் பிறகு இறுதி ஆட்டத்தில் சந்திக்க உள்ள லிவர்பூல் -டோட்டன்ஹம் ஆகிய இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் இல்லை என்பதால், வரும் ஜூன் 2-ஆம் தேதி அதிகாலையில் நடக்கவிருக்கும் இறுதி ஆட்டம், கடைசி நிமிட விசில் அடிக்கும் வரை சுவாரஸ்யமாகவும், கடுமையாகவும் இருக்கும் என்பது உறுதி. அந்தக் கடைசி நிமிட விசிலுக்காகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள், உற்சாகமாய்!

0 Comments

leave a reply

Recent News