loader
மைக்கா ஹோல்டிங்ஸ் 2.0 ஆரம்பம்! - மே 2-ல் விசாரணை!

மைக்கா ஹோல்டிங்ஸ் 2.0 ஆரம்பம்! - மே 2-ல் விசாரணை!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஏப்ரல்- 27

இந்திய சமுதாயத்திற்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்த மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் பல வழக்குகளைச் சந்தித்து, பின் 2010-ல் அந்நிறுவனத்தில் பங்கு வகித்த சுமார் 60 ஆயிரம் பங்குதாரர்களின் பங்கை ஒரு பங்குக்கு 80 காசு என்ற நிலையில், பங்குகளுக்கான பணத்தைக் கொடுத்து ஜி-டீம் என்ற நிறுவனம் சுமார் 93 விழுக்காடு பங்கினை வாங்கியது.
அந்த நேரத்தில் வேறு வழியில்லாமல் பல பங்குதாரர்கள் தங்கள் பங்கினை விற்றனர். ஆனால், அதில் இன்னும் 7 விழுக்காட்டினர் அதாவது சுமார் 5000 பங்குதாரர்கள் தங்களின் பங்கை விற்காமால், இன்று வரை பங்குதாரர்களாக உள்ளனர் என ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் புனிதன் தெரிவித்தார்

ஜி-டீம்  மைக்கா ஹோல்டிங்ஸைக் கையில் எடுத்த பிறகு, அதன் செயல்பாடு, வரவு செலவு, விற்பனை மற்றும் புதிய சொத்துக்கள் வாங்குவது  தொடர்பான எந்தத் தகவலையும் பங்குதாரர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை என புனிதன் கூறினார்.

அந்த வகையில் அந்த 7விழுக்காடு பங்குதாரர்களில் பலருக்கு விளக்கமளிக்கத் தவறியதால், கடந்த புதன் கிழமை 6 பேர் மீது மூன்று பங்குதாரர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.
டத்தோ எஸ்.எம் முத்து, டத்தோ இளங்கோவன், அலமேலு ஆகிய மூன்று பங்குதாரர்களும்
ஜி -டீம் நிறுவனம், டான் ஸ்ரீ ஞானலிங்கம், டான் ஸ்ரீ குணசிங்கம், அரசு, ரமேஷ் மற்றும் மைக்கா ஹோல்டிங்ஸ் மீது வழக்குத் தொடுத்துள்ளனர் என புனிதன் கூறினார்.

ம.இ.கா, மைக்கா ஹோல்டிங்ஸ் மீது வழக்கு தொடுக்கவில்லை எனவும், பங்குதாரர்கள்தான் தொடுத்துள்ளனர் என்றும், ம.இ.கா பங்குதாரர்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார். இந்த வழக்கில் பங்குதாரர்களுக்காக  வாதாட வழக்கறிஞர்களான டத்தோ டேவிட் குருபாதம், முரளி, வசந்தி, தினேஷ் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

இந்த 9 ஆண்டு காலத்தில், பல பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. சொத்துக்களும் விற்கப்பட்டுள்ளது. லாபங்களையும் அந்நிறுவனம் அடைந்தது. ஆனால் எங்களுக்கு எந்த லாப ஈடும் தரவில்லை. என்ன நடக்கிறது? என்றும் தெரியவில்லை.
இந்த முறைகேட்டை விசாரிக்கவே வழக்குத் தொடுத்தோம் என டத்தோ இளங்கோ  தெரிவித்தார்.

ஆரம்பத்தில் மைக்காவின் மிகப் பெரிய சொத்துக்களான  ஓரியண்டல் காப்புறுதி நிறுவனம் மற்றும்  தும்போக் தோட்டம் ஆகியவற்றில் ஏதோ தில்லு முல்லு நடந்துள்ளது.
ஆரம்பத்தில் 78 மில்லயன் மதிப்பு என பங்குதாரர்களிடம்  கூறப்பட்ட   ஓரியண்டல் காப்புறுதி நிறுவனம், பிறகு 148 மில்லியனுக்கு தியூன் என்ற நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது.  அதேபோல் 10 மில்லியன் மதிப்பு என்று சொல்லப்பட்ட தும்போக் தோட்டம், 28 மில்லியனுக்கு ஒரு நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது.
97 விழுக்காடு பஙகுகளை விற்பனை செய்த பங்குதாரர்களிடம், சொத்து மதிப்பைச் சரியான முறையில் ஆய்வு  செய்து, கெனங்கா என்ற சொத்து ஆய்வு நிறுவனம் தரவில்லை என்ற சந்தேகம் உள்ளது. காரணம் ஓரியண்டல் காப்புறுதி நிறுவனத்தை வாங்கிய தியூன் நிறுவனத்தில் கெனங்கா பங்கு வைத்துள்ளது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் டான் ஸ்ரீ ஞானலிங்கம் உட்பட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது பல உண்மைகள் வெளிவரும் என வழக்குத் தொடுத்த பங்குதாரர்களும், புனிதனும் தெரிவித்தனர்.

இந்த விற்பனை லாபம் மைக்கா ஹோல்டிங்ஸுக்குச் சம்பந்தம் இல்லாத ஒரு நிறுவனத்திற்குப் போனது எப்படி? எங்கள் லாப ஈடு எங்கே? எங்களுக்கு எதையும் தெரியப்படுத்தாமல் செயல்படுவது ஏன்? என்ற கேள்விக்கு விடை தேடவே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகப் பங்குதாரர்கள் தெரிவித்தனர்.

மைக்கா ஹோல்டிங்ஸ் சர்ச்சை மீண்டும் தொடங்கிவிட்டது. இப்போது 'மைக்கா ஹோல்டிங்ஸ் 2.0' -வாக உருவெடுத்துள்ளது. இதில் என்னென்ன உண்மைகள் புதைந்து கிடக்கின்றன?... யார் யார் ஏமாற்றப்பட்டனர்? என்பதற்கான விடை மே 2 -ஆம் தேதி தொடங்கப்போகும் விசாரணையின் வழி தெரிந்துவிடும்!

0 Comments

leave a reply

Recent News