கோலாலம்பூர், ஜூலை 27-
டத்தோ அந்தஸ்துடைய நபர் ஒருவர் முதலீட்டுத் திட்டம், கூட்டுறவுக் கழகம், தனியார் வங்கி ஆகியவற்றில் பணத்தை ஏமாற்றியதாக இதுவரை நாடு தழுவிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் செய்த 15 போலீஸ் புகார்கள் தொடர்பில் புக்கிட் அமான் துரித விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென கோரி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இன்று மகஜர் வழங்கப்பட்டது.
இந்த மோசடி சம்பவம் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள வேளையில் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்ற தகவல் எதுவும் கிடைத்தப்பாடில்லை என்றும் இதன் தொடர்பில் துரித விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன் இன்று கூடிய பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எங்களின் பணத்திற்கு என்னதான் பதில். எங்களை ஏமாற்றிய நபரிடமிருந்து பணத்தை திரும்ப பெற முடியாததால்தான் நாங்கள் போலீசின் உதவியை நாடினோம். ஆனால் போலீஸ் தரப்பும் இந்த விவகாரத்தில் மெத்தனபோக்குடன் நடந்து கொள்வது எங்களுக்கு வேதனை அளிப்பதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான டத்தோ செல்வமணி ராமசாமி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை முதலீடு செய்த ஆவணங்கள், இந்த முதலீடு திட்டம், கூட்டுறவுக் கழகம் மற்றும் தனியார் வங்கியில் செய்யப்பட்ட மோசடி தொடர்பிலான அனைத்து ஆதாரங்களை ஒன்றிணைத்து மகஜராக தயாரித்து இன்று புக்கிட் அமானில் வழங்கப்பட்டது. இந்த மகஜரை புக்கிட் அமான் சேர்ந்த தொடர்பு ஊடக பிரிவின் ஏஎஸ்பி கலிடாத்துல்அக்மால் முகமட் இஸ்மாயில் பெற்றுக் கொண்டதாக மலேசிய தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீ ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் புக்கிட் அமான் உடனடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்களில் மக்கள் பணத்தை இழக்காமல் இருக்க குற்றத்தை புரிந்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சோழன் சிதம்பரம் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பில் போலீஸ் தரப்பு ஏன் முறையான விசாரணையை மேற்கொள்ள மறுக்கிறது என்பது தெரியவில்லை. மேலும் இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலவரத்தையும் போலீஸ் தரப்பு தெரிவிக்காமல் உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பில் எஸ்பிஆர்எம் புகாரும் செய்யப்பட்டுள்ளது. பணத்தை ஏமாற்றியதாக கூறப்படும் நபர் பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அவர் பணத்தை திருப்பி கொடுக்காத பட்சத்தில் சட்ட நடவடிக்கை தொடரும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் டினேஷ் தெரிவித்தார்.
செய்தி: காளிதாசன் தியாகராஜன்
படம்: காளிதாசன் இளங்கோவன்
0 Comments