loader
இடைநிலைப்பள்ளியில் தமிழ்க்கல்வி: 10 மாணவர்கள் இருப்பின் கல்வியைப் போதிக்கலாம்!  டத்தோஸ்ரீ சரவணனின் பரிந்துரையை நிறைவேற்றுவேன் -பிரதமர்

இடைநிலைப்பள்ளியில் தமிழ்க்கல்வி: 10 மாணவர்கள் இருப்பின் கல்வியைப் போதிக்கலாம்! டத்தோஸ்ரீ சரவணனின் பரிந்துரையை நிறைவேற்றுவேன் -பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 22-

இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் தமிழ்க்கல்வியைக் கற்க ஒருபோதும் தடை இருக்காது. 
தற்போதைய விதிமுறைப்படி 15 மாணவர்கள் இருந்தால் மட்டுமே தமிழ்க்கல்வி போதிக்கப்படும் என்பது
தளர்வு செய்யப்பட்டு 10 மாணவர்கள் இருந்தாலே அவர்களுக்குத் தமிழ்க்கல்வி பயில வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென 
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்
பேசிய டத்தோஸ்ரீ சரவணன்  பரிந்துரையை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய பிரதமர் 
அந்தப் பரிந்துரை தொடர்பில் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறினார்.

மலாய் மொழி கட்டாயப் பாடம்தான். ஆனால் ஒருபோதும் மற்ற மொழிகளுக்கு நாம் தடையாக இருக்கக்கூடாது. 
இடைநிலைப் பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்கள் தமிழ்க்கல்வியைக் கற்பதற்குத் தடை இருக்கக்கூடாது. 
அவர்கள் தமிழ்க்கல்வியைப் பயில நாம் ஊக்குவிக்க வேண்டும்.

ஆகையால் மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அவர்களின் தாய்மொழி கல்விக்குத் தடை விதிக்கக்கூடாது. 
இடைநிலைப்பள்ளியில் தமிழ்க்கல்வி பாட திட்டத்திற்கான விதிமுறைகளில் தளர்வை ஏற்படுத்த 
உடனடியாக கல்வி அமைச்சரைச் சந்திக்கவுள்ளதாக அவர் கூறினார்.

தாய்மொழிகளுக்கு நாம் முக்கியதுவம் அளிக்க வேண்டும். புதிய மலேசியாவை உருவாக்க சிந்தனை மாற்றம் அவசியம்.
பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் இனபாகுபாடு இருக்கக்கூடாது. அனைத்து இனத்தவர்களையும் ஒன்றாக பார்க்கும் குணம் 
கொண்டவரே இந்த நாட்டை சிறந்த முறையில் வழிநடத்த முடியும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த வகையில் அரசாங்கத்தின் வாயிலாக நம் நாட்டில் நடைபெறும் 11ஆவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 
வெ.1 மில்லியன் மானியம் வழங்கப்பட்டது. தமிழ்க்கல்வியின் வளர்ச்சிக்காக மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைக்கு 
கூடுதலாக வெ.2 மில்லியனை மானியமாக வழங்குவதாக பிரதமர் மேடையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை சிலர் சர்ச்சையாக்கலாம். நான் தமிழனாய் மாறிவிட்டேன் என்றும் கூறலாம். அதனை நான் பொருட்படுத்த 
போவதில்லை என்றும் புதிய மலேசியாவை உருவாக்க அனைவரையும் ஒன்றாக பார்க்கும் குணமுடைய தலைவராக இருக்க 
விரும்புவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது உரையில் கூறினார்.

உரையின் இறுதியில் பிரதமர், யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறி முடித்தபோது அரங்கம் அதிரும் வகையில் 
கரகோஷம் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி : தி.க.காளிதாசன்
படம்: கி.தீபன்/ இ.எஸ்.காளிதாசன்

0 Comments

leave a reply

Recent News