loader
அந்நியத் தொழிலாளர் விவகாரம் - வீதிப் போராட்டம் வெடிக்கும்! - ஹாஜி அயூப் கான் எச்சரிக்கை

அந்நியத் தொழிலாளர் விவகாரம் - வீதிப் போராட்டம் வெடிக்கும்! - ஹாஜி அயூப் கான் எச்சரிக்கை

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே-14

மனிதவள அமைச்சின் கீழ் பல மகஜர், பல கலந்துரையாடல்கள் மற்றும் மாநில ரீதியான பேச்சுவார்த்தை என எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும்,  அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு இன்னும் ஒரு நல்ல முடிவு கிடைக்கவில்லை என பிரிஸ்மா தலைவர் ஹாஜி அயூப் கான் தெரிவித்தார்.

இந்தப் பிரச்னைக்கு மனிதவள அமைச்சர் குலசேகரன் விரைவில் தீர்வு காணப்படும் என்று ஆறுதல் சொன்னார். ஆனால் அவர் பதவிக்கு வந்து ஓராண்டு ஆகியும் தீர்வு பிறக்கவில்லை. எங்களின் ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் கிடப்பில் தூங்குகின்றன. 
நாங்கள் எதிர்நோக்கும் பிரச்னையின் ஆபத்து உண்மையில் அவர்களுக்குப் புரியவில்லையா?  என  ஹாஜி அயூப் கான் கேள்வி எழுப்பினார்.

உள்துறை அமைச்சும், மனிதவள அமைச்சும் இன்னும் பிரச்னைக்குத் தீர்வு காணாமல் இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

நாங்கள் விண்ணப்பித்த அந்நியத் தொழிலாளர் எண்ணிக்கைக்கு ஒப்புதல் வழங்காதது மட்டுமல்லாமல், இதற்கு  முன் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்கள்  சொந்த நாட்டிற்குத் திரும்பினால், அவர்களுக்குப் பதிலாக (கந்தியான்) மாற்று அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் விஷயத்திலும் மௌனம் காக்கிறார்.

இது வரை 25 சதவிகித உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், வணிகர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளோம். எங்கள் பொறுமைக்கும் ஓர் அளவுண்டு. எங்கள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு பிறக்கவில்லை என்றால் வீதிப் போராட்டம் வெடிக்கும் என  அயூப் கான் கூறினார்
 
அந்நியத் தொழிலாளர் பிரச்னையினால், எங்களைத் தவிர்த்து இன்னும் 11 துறைகளைச் சார்ந்த இந்திய வியாபாரிகள்  பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்களும் தங்களின் சங்கங்கள் வாயிலாகவும், 'மைக்கி', தேசிய சம்மேளனங்கள் மூலமாகவும் பல பரிந்துரைகளை முன் வைத்துள்ள போதும், நல்ல பதில் இல்லை . 
எங்கள் பிரச்னையை பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடமும் கூறியிருந்தோம். இதுநாள் வரை பொறுமையாகக்  காத்திருந்தோம். எங்கள் பாரம்பரிய வியாபாரத்துறை அழிவதை இனியும் வேடிக்கைப் பார்க்க மாட்டோம் எனக் கூறிய அயூப் கான், எங்களையும் கொடி பிடிக்க வைத்து விடாதீர்கள் என, அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். 
எங்கள் பிரச்னையைக் கையாளுவதில் அரசு மெத்தனப்போக்கைக் காட்டினால், பிரதமர் அலுவலகத்தின் முன் வீதிப் போரட்டம் வெடிக்கும். நாட்டின் தொழில்துறை சார்ந்தவர்கள் வீதிப் போராட்டத்தில் இறங்கினால், அது நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றார் அவர்.

முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கிய 30,000 அந்நியத் தொழிலாளர்களின் நிலை என்ன? என்பதையும் கூறாமல் மனிதவள அமைச்சர் குலசேகரன் அமைதி காக்கிறார். இந்திய அமைச்சராக இருந்துகொண்டு எங்கள் நிலைமைக்குத் தீர்வு சொல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

இப்போது  நான்கு அமைச்சர்கள் இருந்தும், நமக்கான தீர்வு பிறக்கவில்லை. ஆனால் அன்று  ஒற்றை அமைச்சராக அமைச்சரவையில் இருந்த துன் ச.சாமிவேலு,  இந்திய வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, சண்டையிட்டு அரசாங்கத்திடம்  பல சலுகைகளை இந்திய வியாபாரத் துறைக்குப் பெற்றுத்தந்தார். அவரைப் பற்றி பல முரண்பாடான விஷயங்களைப் பலர் சொன்னாலும், துன் சாமிவேலு அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் சிங்கம்தான்; பூனை கிடையாது. இந்தியத் தொழில்துறை சார்ந்த  பரிந்துரைகள் பலவற்றை அரசாங்கத்திடம் ஒற்றை மணிதனாக நின்று குரல் எழுப்பி, பெற்றுத் தந்தார் என, ஹாஜி ஆயூப் கான் செந்தூலில் நடந்த நோன்பு துறப்பு  நிகழ்ச்சியில் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News