loader
இந்து ஆலயம், இரும்புக் கடைகள் உடைப்பு!  கொந்தளிப்பில் மக்கள்!

இந்து ஆலயம், இரும்புக் கடைகள் உடைப்பு! கொந்தளிப்பில் மக்கள்!

 

கோலாலம்பூர், பிப், 27-

ஸ்தாப்பாக் ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உட்பட 3 இரும்புக் கடைகள் இன்று உடைக்கப்பட்டதில், அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்ற அறிவிப்பு எதுவும் இன்றிநேற்று முன்தினம் (26.2.2020) காலையில்  கோலாலம்பூர் மாநகர் மன்றம், நில அலுவலக அதிகாரிகள் ஆலயத்தையும் கடைகளையும் உடைத்ததாக ஆலயத் தலைவர் ஶ்ரீ ரமேஷ் தெரிவித்தார்.

பிபிஆர் அடுக்ககத்தின் அருகில் அமைந்திருந்த ஆலயத்தை, மேம்பாட்டு பணி காரணமாக தற்போது இருந்த இடத்தில் நில அலுவலகம் தங்களுக்கு மாற்று இடத்தை வழங்கியதோடு, ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதோடு ஆலயத் திறப்பு விழாவில் நில அலுவலக துணை இயக்குநரும் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் 3 இரும்புக் கடைகளுக்கும் மாற்று இடமாக ஆலயம் அமைந்திருந்த இடத்திற்கு அருகில் இடத்தை வழங்கியது நில அலுவலகம்.

ஆனால்,  2017-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி, ஆலயத்தையும் கடைகளையும் காலி செய்ய வேண்டும் என்று நில அலுவலகம் நோட்டீஸ் வழங்கியிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து தாம் நீதிமன்ற வழக்குத் தொடுத்ததாக  ஶ்ரீ ரமேஷ் கூறினார். 

இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதுமட்டுமின்றி இது போன்ற விவகாரங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்குச் சென்று விட்டால் நீதிமன்ற வழங்கும் கடிதத்தை வைத்துதான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். ஆனால், நீதிமன்ற உத்தரவு இன்றி அனைத்தையும் உடைத்துவிட்டனர்.

இவ்விவகாரத்தில், செத்திய வங்சா, வங்சா மாஜூ ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு அதிகாரிகள் தலையிட்டும் ஆலயத்தையும் கடைகளையும் காப்பாற்ற முடியவில்லை.

இதனால் ஆலயம், சாமி சிலைகள், இரும்புக் கடைகளின் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? என்று ஸ்தாப்பாக் வட்டாரப் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

ஆலயத்திற்கு நோட்டீஸ் வழங்கிய பின்னர்,  இந்த ஆலயத்தை உடைக்கக் கூடாது என்று பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூட்டரசுப் பிரதேச அமைச்சருக்கு கடிதம் வழங்கியிருந்தார். ஆனால் எவ்வித ஆதாரங்களும் இன்றி அனைத்தையும் உடைத்துவிட்டனர்.

இது சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய விருக்கிறோம். இதே இடம் அல்லது மாற்று இடம், சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு நஷ்ட ஈடு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து வழக்குப் பதிவு செய்யப்படும். அதுவரையில் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ஶ்ரீ ரமேஷ் கூறினார்!

0 Comments

leave a reply

Recent News