loader

All News

கிள்ளான், ஜன.21-

அன்மையில் பவர் ஷட்டலர்ஸ் பேட்மிண்டன் குழுவின் ஏற்பாட்டில் மகளிருக்கான இரட்டையர் பிரிவு பூப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

கிள்ளான் ப்ரேண்ட்லி பேட்மிண்டன் அகாடெமி பூப்பந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த மகளிர் இரட்டையிர் பிரிவு பூப்பந்து போட்டியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

முதன் முறையாக ஏற்பாடு செய்த இந்த போட்டி நிகழ்ச்சியில் 18 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். 

இந்த போட்டியில் வீட்டுப் பெண்களும் வேலைக்கு செல்லும் பெண்களும் கலந்து கொண்டது தமக்கு மகிழ்ச்சியளித்திருப்பதாக பவர் ஷட்டலர்ஸ் பேட்மிண்டன் குழுவின் தலைவியான ஹர்மொனி டேவி கூறினார்.

மேலும் எதிர்காலங்களில் பெண்களுக்காகவே பிரத்தியேகமாக  பூப்பந்து போட்டிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்தடுத்து செய்யவிருக்கும் போட்டிகளில் அதிகமான பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு பெண்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காரணம் அவர்களின் ஆரோகியத்தையும் மேம்படுத்தும், தன்னம்பிக்கையும் மேலோங்கச்செய்யும் எனவும் ஹர்மொனி டேவி கூறினார்.

கோலாலம்பூர், டிச.26-

பகாங், லிப்பிஸ் மண்ணின் மைந்தரான 26 வயது உடற்பயிற்சி பயிற்றுநர் டாக்டர் ஜெய்பிரபாகரன் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 12 மணி நேரம் இடைவிடாது கார்டியோ எடைத் தூக்கும் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து உலக சாதனை, மலேசிய சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு சாதனைகளை படைத்திருக்கும் ஜெய் டிரேட்மில், டம்பெல், பார்பிள் உட்பட 20க்கும் மேற்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி எடைத் தூக்குவதில் சாதனை படைத்தார்.

இப்பொழுது அதன் தொடர் முயற்சியாக அடுத்த ஆண்டு புதிய உலகம் மற்றும் ஆசிய சாதனையை படிப்பதற்கு அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை 5 மாதங்களுக்கு தீவிர பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சொன்னார்.

வாரத்தில் 6 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 முறை இப்பயிற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்த புதிய முயற்சி முன்பை விட மிக சவாலானதாக இருக்கும். அதனை எதிர்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக ஜெய் தெரிவித்தார்.

தமக்கு பக்க பலமாக இருந்து ஆசியும் ஆதரவும் வழங்கி வரும் தாயார் எஸ்.சுகுணமலர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஜெய் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

ஜெய்யின் இந்த முயற்சி வெற்றியடைந்து அவர் இன்னும் பல சாதனைகளை புரிய தமிழ்லென்ஸ் வாழ்த்துகிறது.

கோலாலம்பூர், டிச.26-

அல்டிமேட் பீட்டவுன் 44 குத்துச் சண்டை போட்டியில் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட பிரிவில் பங்கு பெற்று கேஷ்வின் தர்மராஜா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஜொகூரிலுள்ள சிட்டி பிளாசா ஜொகூர் பாருவில் நடைபெற்ற இப்போட்டியில் வயதிற்கு ஏற்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

அரேனா பி-இல் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட போட்டியில் களமிறங்கிய கேஷ்வின் தர்மராஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட முகமட் அமாரை வென்று தங்கப் பதகத்தை தட்டிச் சென்றார்.

சிறுவயதில் இருந்து குத்துச்சண்டையில் அதிகம் ஆர்வம் கொண்ட கேஷ்வினை அவரின் பெற்றோர் அதற்கான பயிற்சி அகாடமியில் சேர்த்து திறமையை வளர்த்துள்ளனர். இதே போன்று அண்மையில் ஜொகூரில் நடைபெற்ற மற்றொரு போட்டியிலும் கேஷ்வின் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்காப்பு கலைத்துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட கேஷ்வின், இது போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்றும் வரும் காலத்தில் கேஷ்வின் நாட்டை பிரதிநிதித்து விளையாடுவதை தாங்கள் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதாகவும் கேஷ்வினின் பெற்றோர் தர்மராஜாவும் சுமதியும் தெரிவித்தனர்.

ஷா ஆலம், செப்.28-

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூர் சிலாங்கூர்  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக கால்பந்து போட்டிகளை  நடத்தி வருகிறது.

நமச்சிவாயம் கிண்ண கால்பந்து போட்டி என்ற அடிப்படையில் இந்த போட்டி 19ஆவது முறையாக இவ்வாண்டு நடைபெற உள்ளது.

இப்படி வரும் அக்டோபர் 14ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை வரை சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெற உள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர் மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 66 ஆண்கள் அணியினர் இந்த போட்டியில் களமிறங்க உள்ளனர்.

அதே வேளையில் இவ்வாண்டு முதல் முறையாக 16 பெண்கள் அணியும் இந்த போட்டியில் களமிறங்க உள்ளது.

ஆண்கள் பிரிவின் முதல் வெற்றிக் குழுவிற்கு தளா வெ.2,000 பரிசுத் தொகையுடன் கோப்பையும் சுழற்கிண்ணமும் வழங்கப்படும். இரண்டாம் வெற்றிக் குழுவிற்கு வெ.1,000இம் மூன்று மற்றும் நான்காவது வெற்றிக் குழுக்களுக்கு தளா வெ.500-ம் வழங்கப்படும். அனைத்து வெற்றிக் குழுக்களுக்கும் கோப்பை வழங்கப்படும். 5 மற்றும் 6 இடத்தை வெல்லும் குழுக்களுக்கு தளா 250 வெள்ளியும் 7 முதல் 16 வரை வரும் குழுக்களுக்கு தளா 100 வெள்ளி பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

பெண்கள் குழுக்களுக்கான பரிசுத் தொகை பற்றி ஏற்பாட்டுக் குழு கலந்து பேசி வருவதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ பத்துமலை தெரிவித்தார்.

மேலும் இப்போட்டில் ஆண்கள் பிரிவில் பல தேர்வுக்கான சிறந்த  விளையாட்டாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் பெண்கள் பிரிவில் சிறந்த விளையாட்டாளர்களுக்கு மூன்று சிறப்பு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த போட்டியில் வெற்றிப் பெறும் முதல் நான்கு குழுக்கள் தேசிய ரீதியிலான கால்பந்து போட்டியில் பங்குபெற வாய்ப்பும் உண்டு என்றார் அவர்.

இதற்கிடையில் சிலாங்கூரிலுள்ள 97 தமிழ்ப்பள்ளிகள், கோலாலம்பூரிலுள்ள 15 தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றை பிரதிநிதித்து  ஆசிரியர்களுக்கு அடிப்படை கால்பந்து பயிற்சியை வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த கால்பந்து போட்டி விளையாட்டை தொடக்கி வைக்க வரவுள்ள மித்ரா சிறப்புக் குழுவின் இயக்குநர் டத்தோ ரமணனிடம் பரிந்துரைக்கவுள்ளதாக போட்டியின் ஏற்பாட்டுக் குழு இயக்குநர் இராமசந்திரன் கூறினார். 

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

படம்: காளிதாசன் இளங்கோவன்

 

பெட்டாலிங் ஜெயா, செப்.18-

பூப்பந்து விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனைத் துறையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் வில்கன் (Vilcon) நிறுவனம் முதல் முறையாக பூப்பந்து போட்டியை நடத்தியது

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களுக்கு பூச்சோங் புரோ ஆன் பேட்மிண்டன் செண்டரில் நடைபெற்ற இந்த பூப்பந்து போட்டியில் 683 போட்டியாளர்கள் பங்குக் கொண்டதாக அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கோவிந்தராஜு தெரிவித்தார்.

 

பூப்பந்து விளையாட்டுப் பொருட்கள் விற்பனைத் துறையில் இந்தியர் சாதனை புரிய வேண்டும் எண்ணத்தில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக நாங்கள் ராக்கெட் பிடி உரையை மட்டும் எங்களின் சொந்த வெல்கன் பிரண்டில் வெளியிட்டோம். அதன் பின்னர் ராக்கெட் நரம்பு வெளியிடப்பட்டு அடுத்த மாதம் முதல் எங்களின் சொந்த ராக்கெட்டுகளையும் நாங்கள் வெளியிடவுள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பொருட்கள் உள்நாட்டில் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான், ரஷியா ஆகிய நாடுகளில்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விநியோகம் செய்யப்பட்டு வரும் வேளையில் இம்முறை நடத்தப்பட்ட பூப்பந்து போட்டியில் பங்குக் கொண்ட இந்தோனேசிய குழுவினரும் ஆதரவு வழங்கி எங்களின் தயாரிப்புகளை அவர்களின் நாட்டிலும் விற்பனை செய்யவுள்ளதாக கூறியது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.

 

இந்த போட்டியில் பல பிரிவுகள் உள்ளன. இளைஞர்களுக்கான பிரிவில் வெ.1,500 முதல் வெ.800 வரை பரிசுத் தொகையுடன் பதங்களும் சிறார்களுக்கான பிரிவின் வெற்றியாளர்களுக்கு வெ.500 முதல் வெ.200 வரை பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

 

இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் அதிக ஈடுபாடு காட்டவும் தங்களின் சொந்த தயாரிப்புப் பொருட்களை விளம்பரப்படுத்தவும் இந்த போட்டி விளையாட்டு நடத்தப்பட்டதாக கோவிந்தராஜு தெரிவித்தார்.இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உட்பட ஷட்டல் வோரியர் பூப்பந்து குழுவும் பிஜே ஸ்போர்ட்ஸ் குழுவும் முழு ஆதரவு வழங்கினர்.

 

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோலாலம்பூர், ஆக.10-
அல்டிமேட் பீட் டவுன் 46 குத்துச் சண்டை போட்டியில் பங்கு பெற்ற கேஷ்வின் தர்மராஜா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஜொகூரிலுள்ள சிட்டி பிளாசாவில் வயதுற்கு ஏற்ப பல பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

அரேனா ஏ-வில் நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய கேஷ்வின் தர்மராஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட எங் வேன் வேயை 2 நிமிடத்திற்குள் தோற்கடித்து தங்கத்தை வென்றார்.

தனது 8 வயதிலிருந்து கேஷ்வின் தர்மராஜா குத்து சண்டை அகாடாமியில் இணைந்து சண்டை பயிற்சியை கற்று வருகிறார். இவர் ஜொகூர் பாரு, உடா உத்தாமா இடைநிலைப்பள்ளியில் மூன்றாம் படிவத்தில் பயின்று வருகிறார்.

இதுவரை 5 குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டி இவர் ஐந்து முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தற்காப்பு கலைத்துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட கேஷ்வின் இது போன்ற பல போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைக்க வேண்டும். அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் கேஷ்வின் நாட்டை பிரதிநிதித்து விளையாடுவதை தாங்கள் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதாக கேஷ்வினின் பெற்றோர் தர்மராஜாவும் சுமதியும் தெரிவித்தனர்.

 

சுபாங் ஜெயா, ஜூன் 5- ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கால்பந்து விளையாட்டில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் பீடுநடைப் போட்டு வருவதோடு, தன் வயதுடைய பெண்களுக்கும் கால்பந்து பயிற்சியை வழங்கி வருகிறார் என்பது பலரையும் ஆச்சரியம் கொள்ள வைக்கும்.

 

அத்தகைய சீரிய பணியில் ஈடுபட்டு கால்பந்து விளையாட்டில் இளம்பெண்களை குறிப்பாக இந்தியப் பெண்களை மிளிர வைத்து அவர்களை சிங்கப் பெண்களாக உருவாக்குவதே தமது தலையாய லட்சியம் என்று கூறுகிறார்ஷா ஆலாம் தாமான் ஶ்ரீ மூடாவைச் சேர்ந்த  கீர்த்தனா சுப்பிரமணியம்.

 

 

 

 

 

 

 

 

 

 

முதல் இடத்தை வென்ற அணி


எந்த விளையாட்டாக இருப்பினும், அதை பாலினம் ரீதியாகப் பார்க்காமல், திறமை அடிப்படையில் களமிறங்க வேண்டும் என்பதே தமது எண்ணம் என்று கூறிய கீர்த்தனா, சிறுவயது முதலே தமக்குள் இருந்த கால்பந்து மீதான ஆர்வத்திற்கு குடும்பத்தினரும் முழு ஆதரவு வழங்கியதாகக் கூறினார்.

 

''தொடக்கத்தின் கால்பந்து விளையாட்டின் மீது இருந்த ஈடுபாட்டால் நான் ஒரு பெண்கள் குழுவில் இணைந்து விளையாடினேன். அக்குழுவின் பயிற்றுநர் எனக்குக் கற்றுக் கொடுக்கும் நுணுக்கங்களை நான் எனது பல்கலைக்கழக குழுவிற்கு போதிப்பேன். அதைத் தொடர்ந்து கால்பந்து அரங்கிற்குச் சென்று அவர்கள் விளையாடும் விதம் மற்றும் நுணுக்கங்களை துல்லியமாக பார்த்து சுயமாகக் கற்றுக் கொண்டேன். அதேவேளையில் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போதுள்ள இளம் பெண்களுக்கு கால்பந்து மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

 

இரண்டாம் நிலை வெற்றியாளர்கள்


தமது ஆர்வத்தின் அடுத்தகட்ட முயற்சியாக இன்று சுபாங்ஜெயாவிலுள்ள SPORTIZZA விளையாட்டரங்கில், LADY BOSS SUPER CUP என்ற பெயரில், வயது வரம்பற்ற நல்லெண்ண கால்பந்துப் போட்டி ஒன்றை ஏற்று நடத்தி இருந்தார்.

 

''புதிய விளையாட்டாளர்களுக்கு அதிகமாக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்ற காரணத்தால் நிபுணத்துவ விளையாட்டாளர்களுக்கு மட்டும் இப்பபோட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றை போட்டியில் 32 குழுக்கள் களமிறங்கியுள்ளன. முதல் நிலை வெற்றிக் குழுவிற்கு 1,800 ரிங்கிட் வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்களுக்கு 1,000 ரிங்கிட் மற்றும் 500 ரிங்கிட் வழங்கப்படுகிறது. நான்காவது நிலை வெற்றியாளர்களையும் ஊக்குவிக்க அவர்களுக்கு 300 ரிங்கிட் வழங்கப்படுகிறது. அவ்வற்றுடன் பல்வேறு விருதுகளும் வழங்கப்படுகிறது,'' என்று அவர் கூறினார்.

 

மூன்றாம் இடத்தை வென்ற அணி


இப்போட்டியைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு மாதங்களில் பெண்களுக்கான கால்பந்து போட்டியையும் நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய கீர்த்தனா, இன்று நடைபெற்ற போட்டியின் மூலமாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதரவற்ற இல்லங்களில் கல்வி வளர்ச்சித் திட்டத்தை தாம் முன்னெடுக்கப் போவதாக SAI YOUTH ACADEMY மையத்தின் தோற்றுநருமான கீர்த்தனா குறிப்பிட்டார்.

 

''பொதுவாக ஆதரவற்ற இல்லத்திற்கு உணவுப் பொருட்களே வழங்குவர். ஒரு மாறுதலுக்காக இப்போட்டியில் கிடைக்கப்பெறும் பணத்தைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சில இல்லங்களுக்கு குறு நூலகம் ஒன்று அமைத்துக் கொடுப்பதுடன் வாசிப்பதற்கான சில தளவாடங்களும் வாங்கிக் கொடுக்கப்படும்,'' என்றார் அவர்.

 

இதனிடையே, நேற்று மாலை நான்கு மணி வரை நடைபெற்ற இப்போட்டியில் OLD KK UNITED குழு முதல் பரிசை வென்ற வேளையில், SP FC, REBELS FT, MTA FC ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்தன.

 

கிள்ளான், பிப்ரவரி 15:  சிலாங்கூர் ‘எம்ஐஜி சங்கம்’ ஏற்பாட்டில் பெனால்டி கிக் போட்டி அண்மையில் நடைபெற்றது. 120 குழுக்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் ‘எஸ்ஏ பாய்ஸ் - ஏ’ அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர். அவர்களுக்குக் கோப்பையும், 6000 வெள்ளி ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை ‘தஸ்வின் எப்சி’ அணியினரும், மூன்றாவது இடத்தை ‘எஸ்ஏ பாய்ஸ் - பி’அணியினரும்,  நான்காவது இடத்தை ‘அர்மாடா தம்பூன்’ அணியினரும் பெற்றனர்.

இப்போட்டி விழாவுக்கு அமானா கட்சியின் தலைவரும், கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினருமான மாட் சாபு சிறப்பு வருகை புரிந்தார்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், டத்தோ விஜி, டத்தோ ஸ்டீபன், டாக்டர் ராஜேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டு பரிசுகளை எடுத்து வழங்கினர்.

மேலும், சிலாங்கூர் எம்ஐஜி சங்கத்தின் உறுப்பினர் டத்தோ ஆனந்த் தமது ‘ஷாடோவ்பேக்ஸ் மோட்டார் சைக்கிள்’ கிளப்புடன் இப்போட்டியில் கலந்துகொண்டதோடு, தமது ஆதரவையும் நல்கினார்.

இந்திய இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டியை ஏற்பாடு செய்ததாகவும், இப்போட்டி விளையாட்டு சிறப்பாக நடைபெற உதவி நல்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் தமது நன்றியைப் பதிவு செய்வதாகவும் சிலாங்கூர் எம்ஐஜி சங்கத்தின் தலைவர் கோபு ரஜினி தெரிவித்துக்கொண்டார்!

 

எவர்ட்டன், நியூகாஸ்டல் அணிகள் மோதவிருந்த ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று தாக்கத்தால் பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டி பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறது.

ஆட்டக்காரர்கள், அதிகாரிகள் இத்தொற்றால் பாதிக்கப்படுவதால் பல ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் எவர்ட்டன், நியூகாஸ்டல் யுனைடெட் அணிகள் மோதவிருந்த ஆட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது வேறொரு தினத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்!

 

யூஇஎப்ஏ சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் போர்தோ அணியையும், இன்டர்மிலான் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஷாக்தார் டோனஸ்க் அணியையும், ஏசிமிலான் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இதர ஆட்டங்களில் ரியல்மாட்ரிட், அஜெக்ஸ் ஏம்ஸ்டர்டாம், ஸ்போர்டிங் சிபி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன!

கடந்த 2018ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி குரேஷியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பை கத்தார் பெற்றுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும்.

கத்தாரில் அப்போது கடுமையான வெப்பம் நிலவும் என்பதால் இந்த போட்டி நவம்பர், டிசம்பரில் நடத்தப்படுகிறது. நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை அங்குள்ள 5 நகரங்களில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடும்.

மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் மூலமே பங்கேற்க முடியும்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

ஜெர்மனி, டென்மார்க் அணிகள் கடந்த மாதம் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் தகுதி பெற்றன.

அதைத்தொடர்ந்து பிரேசில், தென் அமெரிக்க கண்டத்தின் முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ், 15வது முறையாகவும், பெல்ஜியம் 13வது முறையாகவும் உலகக்கோப்பையில் விளையாடுகின்றன.

கோலாலம்பூர், ஆகஸ் 31: மலேசியாவில் சிலம்பக்கலையில் சாதனை நிகழ்த்தி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் கெடாவைச் சேர்ந்த 27 வயது கவியரசி சங்கர்.

14 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பக் கலையை நிகழ்த்தி இச்சாதனையைப் படைத்துள்ளார்,  சிலம்ப பயிற்சியாளரான கவியரசி சங்கர்.

தமது அடுத்த இலக்கு கின்னஸ் உலக சாதனை நிகழ்த்துவதுதான் என்று கூறும் இவர், சிலம்பக் கலையை ஆர்வத்தோடு பலரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தமது வாழ்நாள் கனவு என்கிறார். 

நூறு ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் இக்கலை இருக்கிறது என்றாலும், சீலாட் மற்றும் தெக்குவான்டோ போல் சிலம்பக் கலையைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை என்கிறார்.

8 வயதிலிருந்தே சிலம்பக்கலையில் ஆர்வம் இருந்ததாகக் கூறும் இவர், பள்ளியில் புறப்பாட நடவடிக்கையின் வழி இக்கலையைக் கற்றதாகக் கூறுகிறார்.

மாஸ்டர் அன்பரசன் - மாஸ்டர் அன்பழகன் இருவரின் தலைமையில், மலேசியக் கோர்வை சிலம்ப சங்கத்தின் கீழ், சிலம்பப் பயிற்சியைத் தற்போது கற்றுக் கொடுத்து வருகிறார் கவியரசி. தெரிவித்தார்.


இரண்டாம் முறையாக இத்தாலி யூரோ சாம்பியன் ஆகியுள்ளது. 1966- உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஒரு பெரிய கோப்பையை வெல்லும் இங்கிலாந்தின் கனவும் இத்தனை போட்டிகளில் மேற்கொண்ட கடின உழைப்பும் வீணாகின. முழு நேர ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றும் 1-1 என்ற இழுபறியிலிருந்து மீள முடியாமல் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் லூக் ஷா தொடக்கத்தை அளித்தார். அவர் அடித்த பிரமாதமான ஷாட் கோலானது இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது. முதல் பாதியில் இத்தாலியினால் கோலை திருப்பி அடிக்க முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தை உக்கிரப்படுத்தியது இத்தாலி,இதனையடுத்து 67வது நிமிடத்தில் போனுக்கி ஒரு கோலை அடித்து சமன் செய்தார். கூடுதல் நேரத்திலும் 1-1 இழுபறி முடியவில்லை என்பதால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

1976-ல் செக்கோஸ்லாவாகியா ஜெர்மனியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய பிறகு யூரோ கோப்பை இறுதி பெனால்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது. 2000 மற்றும் 2012ம் ஆண்டு யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் தோல்விகளைச் சந்தித்த இத்தாலி, இந்த முறை வெற்றியைத் தக்க வைத்து சாதனைப் படைத்துவிட்டது,!

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், கடந்த 29 -ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் இங்கிலாந்து அணி மோதியது. பரம எதிரிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் நீயா-நானா என்று வரிந்து கட்டி நின்றனர்.

இதில் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக செயல்பட்ட இங்கிலாந்து அணியினர், ஜெர்மனியின் தடுப்பு கோட்டையைத் தகர்த்தனர். ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. நாக்-அவுட் சுற்றில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வீழ்த்துவது 1966-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்நிகழ்வாகும்.

இந்த நிலையில் போட்டியை நேரில் காண வந்த ஜெர்மனியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ஜென்மன் அணி தோல்வி அடைந்ததால் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இது ஸ்டேடியத்தில் உள்ள திரைகளிலும் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் இணையத்தில் அதனைக் கிண்டல் செய்து பதிவிட்டனர்.

இணையத்தில் இந்த சம்பவம் வைரலாகப் பரவிய நிலையில், அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் பலர் கருத்து பதிவிட தொடங்கினர். இதனால் இணையத்தில் கருத்து மோதல்கள் உருவானது. இதற்கிடையில் அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோயல் ஹுயுக்ஸ் என்பவர் 50,000 பவுண்டுகளை இலக்காக வைத்து ஆன்லைனில் நிதி திரட்ட ஆரம்பித்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட அந்த சிறுமிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் தற்போது வரை அந்த சிறுமிக்காக 28,500 பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டுள்ளது. இது குறித்து ஜோயல் ஹுயுக்ஸ் கூறுகையில், இங்கிலாந்தில் உள்ளவர்கள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்று அந்த சிறுமி தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்!

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி தற்போது விளையாடும் பார்சிலோனா கிளப் அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜெண்ட்டினா நாட்டின் கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 

இதற்கிடையில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி பெய்ரன் முனிச் அணியிடம் 8-2 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வி மெஸ்ஸியை பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக பார்சிலோனா அணி நிர்வாகத்துக்கு மெஸ்ஸி கடிதம் எழுதியுள்ளாராம்.

அந்தக் கடிதத்தில் அணியிலிருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  மெஸ்ஸியின் ஆட்டத்தால் பார்சிலோனா அணி 10 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2007-க்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா அணி இம்முறை படுதோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது!

செர்டாங், பிப். 1-

கேப்டன் செல்வக்குமார் ஆதரவில், மாபெரும் பெனால்டி கிக் போட்டி செர்டாங்கில் நாளை நடைபெறவுள்ளது.

செர்டாங் இளையோர் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில், 3-வது ஆண்டாக நடைபெறும் இப்போட்டி, செர்டாங் மார்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 64 குழுக்கள் களமிறங்கவுள்ளன.

பெனாராஜு இன்சான் (PENARAJU INSAN) இயக்கத்தின் தலைவர் கேப்டன் செல்வக்குமார் ஆதரவில் இந்த பெனால்டி கிக் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகையாக 7,500 வெள்ளியை கேப்டன் செல்வக்குமார் வழங்கியுள்ளதாக செர்டாங் இளையோர் சமூக நல இயக்கத்தின் தலைவர் கமல்நாத் முனியாண்டி கூறினார்.

இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் அணியினருக்கு 4,000 வெள்ளியும், வெற்றிக் கிண்ணமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2,000 வெள்ளியும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 1,000 வெள்ளியும், நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 500 வெள்ளியும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இளையோர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பெனால்டி கிக் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
இப்போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான குழுக்கள் பங்கேற்பதுதான் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும்,
அதே வேளையில் இப்போட்டியின் வாயிலாகக் கிடைக்கும் பணத்தில், செர்டாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கமல்நாத் முனியாண்டி கூறினார்.

இந்திய இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும். இதன் அடிப்படையில் இப்போட்டிக்கு பெனாராஜு இன்சான் இயக்கம்  முழு ஆதரவை வழங்கியுள்ளது.

வரும் காலங்களில் இளையோரை மேம்படுத்தும் திட்டங்களையும் மேற்கொள்ள சங்கம் இலக்கு கொண்டுள்ளதாக அதன் தலைவர் கேப்டன் செல்வக்குமார் கூறினார்!

கோலாலம்பூர் அக்டோபர்- 20

முதல்முறையாக நடத்தப்படும் டத்தோ ஸ்ரீ புலேந்திரன் கிண்ண 'பெனால்ட்டி கிக்' போட்டி இன்று தலைநகரில் தொடங்கியது.

ஜொகூர், சிலாங்கூர், பேராக் இன்னும் பல மாநிலங்களில் இருந்து 48 குழுக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். பத்து தொகுதியில் இருந்து செந்தூல் கிளப் அணி, ம.இ.கா வின் நிர்வாகச் செயலாளர் ஏ.கே ராமலிங்கம் தலைமையிலும், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு அணி, ம.இ.கா இளைஞர் அணியின் விளையாட்டுப் பிரிவு பொறுப்பாளர் அன்ட்ரூ தலைமையிலும் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

இப்போட்டியை டத்தோ ஸ்ரீ புலேந்திரன் இன்று காலையில் துவக்கிவைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  எந்த ஒரு தப்பான வழிக்கும் செல்லாமல் நமது இந்திய இளைஞர்கள் ஒற்றுமையாக விளையாட்டுப் போட்டிகள் போன்ற ஆரோக்கியமான  நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்பதற்காகவும், நமது இளைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இப்படிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.

டத்தோ ஸ்ரீ புலேந்திரன் கிண்ணத்தை தட்டிசெல்லும் அணிக்கு 3000 வெள்ளி ரொக்கமும், 2-ஆம் நிலை அணிக்கு 2000 வெள்ளியும், 3-ஆம், 4-ஆம் நிலை அணிக்கு தலா 1000 வெள்ளி ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படும் என டத்தோ ஸ்ரீ புலேந்திரன் தெரிவித்தார்!

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

தற்போது சுவிட்சர்லாந்தில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 2017, 18 களில் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறியும் வெற்றிபெறவில்லை. மூன்றாவது முறையாக இந்த ஆண்டும், அரையிறுதியில் சீனாவின் சென் யூவுடன் மோதிய சிந்து, 21-7, 21-14 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதனையடுத்து, ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து.

இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் பி.வி. சிந்து.

2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய  பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார்.
சிந்துவின் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!

கோலாலம்பூர் ஆகஸ்ட்- 9

 

மலேசிய இந்திய  விளையாட்டு கலாச்சார அறவாரியம் (எம்.ஐ.எஸ்.சி.எஃப்) மற்றும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் விளையாட்டுப் பகுதி இணை ஏற்பாட்டில், ஆசியா எறி பந்து ஃபெடரேஷன் ஒருங்கிணைப்பில், நாளை (10.8.2019) சனிக்கிழமை, சுபாங் ஜெயா  ஸ்டேடியம் 3k அரங்கில் இந்தியா - மலேசியா எறிபந்து விளையாட்டுப் போட்டி நடைபெறவிருப்பதாக எம்.ஐ.எஸ் சி.எஃப் தலைவரும், ம.இ.காவின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.

 

ஆசியா எறிபந்து ஃபெடரேஷன் செயலாளர் டாக்டர் எஸ்.மணி தலைமையில், இந்தியாவில் இருந்து பெண்கள் அணி இப்போட்டியில் கலந்துகொள்கிறார்கள். அந்த ஃபெடரேஷன் குழுவின் பயிற்றுனர்கள் குழு, இங்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பெண்கள் அணிகளுக்குப் பயிற்சி வழங்கியுள்ள நிலையில், நாளை இந்திய அணியுடன், மலேசிய அணி விளையாடவிருப்பதாக  டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

 

பெண்களுக்காக  அறிமுகம் செய்யப்பட்ட  இந்த விளையாட்டில், இப்போது ஆண்கள் - பெண்கள் என இரு பிரிவு உள்ளது. ஆசியாவைப் பொறுத்தவரை 9 நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதாகவும், 10-வது நாடாக மலேசியா தற்போது இணைந்துள்ளதாகவும் டத்தோ டி.மோகன் தெரிவித்தார். வரும் காலத்தில் ஆசிய போட்டிகளில் இணைக்கும் முயற்சியையும் இந்த ஃபெடரேஷன் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 

இந்த  விளையாட்டுப் போட்டிக்கு பிறகு,  ம.இ.கா இளைஞர் பிரிவின் முயற்சியில், மலேசியாவில் சில  பயிற்றுனர்களுக்குப் பயிற்சி வழங்கி, மாநில ரீதியில் இளைஞர்களுக்கு ஓராண்டு காலம் எறிபந்து பயிற்சிகள் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின் எம்.ஐ.எஸ்.சி.எஃப்  தலைமையில், மாநில ரீதியிலும் தேசிய ரீதியிலும் போட்டிகளை நடத்தி, தேசிய ரீதியில் வெற்றி பெறும் அணியை மலேசியாவைப் பிரதிநிதித்து எறிபந்து போட்டிகளுக்கு அனுப்பி வைப்போம் என டத்தோ டி. மோகன் கூறினார். அதன் முதல் படியாக இந்த  ஆட்டம் அமையும் என அவர் தெரிவித்தார். விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், நாளை நடக்கும் ஆட்டத்தைக் காண அழைக்கப்படுவதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்!

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜுலை 22-

கோல்ஃப் விளையாட்டு என்பது வசதியானவர்கள், பணக்காரர்களுக்கான விளையாட்டு என்ற கண்ணோட்டம்  பலருக்கும் உண்டு. ஆனால், கோல்ஃப் விளையாட்டிற்கு வசதியும், பணமும் மட்டுமே தகுதி அல்ல, அதற்கான ஆர்வமும் திறமையும் இருந்தாலே, கோல்ஃப் விளையாட்டில் நாமும் கொடி நாட்டலாம் எனச் சொல்ல வைத்திருக்கிறார், நம் இந்திய சமுதாயத்தின் எளிய பிள்ளையான டர்ஷன் குணசேகரன்.

18 வயதான டர்ஷன், 8 வயதில் இருந்து கோல்ஃப் விளையாடுகிறார். இவருடைய சாதனைகளைப் பார்ப்பதற்கு முன், இவர் எப்படி கோல்ஃப் விளையாட்டு உலகத்திற்குள் நுழைந்தார் என்பதை,  அவருடைய தந்தை குணசேகரன் கூறுகிறார்... கேட்போம்.

என் மகனுக்குச் சிறு வயதில் தாழ்வு மனப்பான்மை இருப்பதை நான் உணர்ந்தேன். நான் ஒரு கோல்ஃப் விரும்பி. என் மகனையும் நான் கோல்ஃப் விளையாட அழைத்துச் செல்வேன். அங்குப் பல சமூகப் பிள்ளைகளுடன் பழகவிட்டேன். அவனுடைய குணாதிசியங்களில் மாற்றம் வந்தது. என் பிள்ளைக்கு அவன் மீதே ஒரு நம்பிக்கை பிறந்தது; அது எனக்குப் பிடித்தது. பிறகு மிகவும் ஆர்வத்துடன் கோல்ஃப் பயிற்சி பெற்று நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் டர்ஷன்.

அதன் பின் கோல்ஃப் துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பல போட்டிகளில் கலந்துகொண்டு, பல சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றார்.

சிலர் சொல்வதுபோல் இது வசதியானவர்களுக்கான விளையாட்டு அல்ல. விளையாட்டுத் திறமையோடு ஒருவரின் குணாதிசியங்கள்,  சிந்தனைகள், சுயநம்பிக்கையை வளர்க்கக் கூடிய ஒரு விளையாட்டு என்கிறார் டர்ஷனின் தந்தை குணசேகரன்.

கடந்த ஆண்டு அனைத்து நிலை சாம்பியன் போட்டியில் வெற்றிபெற்ற டர்ஷன்,

எம் .எஸ்.எஸ்.எம் பள்ளிகளுக்கான போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து பல முறை வெற்றியாளராக  வலம்வந்துள்ளார். மேலும், தனியார் பெறுநிறுவனங்கள் நடத்திய கோல்ஃப் போட்டிகளிலும் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.

கோல்ஃப் விளையாட்டு டர்ஷனுக்கு அமெரிக்காவில் ஒரு கல்வி வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா பன்ஹாண்டின் ஸ்டேட் பல்கலைக்கழகம், நான்கு வருடம் கோல்ஃப் பயிற்சி எடுக்க டர்ஷனுக்கு முழு உதவித் தொகை வழங்கி, வாய்ப்பு வழங்கியுள்ளது. அதோடு அவர் 4 ஆண்டுகள்  உடலியல் கல்வியில் பட்டப் படிப்பு படிக்க, 60 சதவிகிதம் கல்வி உதவித் தொகை வாய்ப்பை டர்ஷனுக்கு வழங்கியுள்ளது.

இந்த வாய்ப்பு டர்ஷனுக்கு வீடு தேடி வரவில்லை. அவருடை சுய நம்பிக்கையால் கிடைத்த வாய்ப்பு.

அவருடைய கோல்ஃப் விளையாட்டு பயிற்றுனர்களில் ஒருவரான சுரேன்  என்பவர் கொடுத்த தகவலைக் கொண்டு இந்த வாய்ப்புக்கு விண்ணப்பம் செய்ததாகக் கூறுகிறார் டர்ஷன்.

இந்தக் கல்விக்கு விண்ணப்பிக்க பல ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கோல்ஃப் போட்டியில் அவர் அடைந்த அடைவு நிலை, கல்வித் தகுதி மற்றும் பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். அதன் பின்னர்தான் வாய்ப்பு தொடர்பான தகவல், விண்ணப்பித்தவர்களுக்குத்  தெரிவிக்கப்படும்.

அனைத்திலும் தகுதி பெற்று, வருகிற  ஆகஸ்ட் 14-ஆம் தேதி, டர்ஷன் அமெரிக்கா செல்லவுள்ளார். இவருடைய வெற்றிக்கு ஏணியாக இருந்த டர்ஷனின் கோல்ஃப் பயிற்றுனர்கள், நண்பர்கள், சகப் போட்டியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரையும் அழைத்து நன்றி சொல்லும் விதமாக, ஒரு விருந்து நிகழ்சியை ஏற்பாடுசெய்து, அவர்கள் ஆசிர்வாதத்துடன், அவர்கள் முன்னிலையில் டர்ஷன் தனக்குக் கிடைத்த வாய்ப்புக் கடித ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

டர்ஷனின் தந்தை ஒரு சரியான இலக்கை நோக்கித் தன் மகனைத் தயார் செய்துள்ளார்.

இந்த நேர்காணல் எதற்கு என்றால், வாய்ப்பு என்பது எல்லா இடத்திலும் உண்டு; அது அனைவருக்கும் பொதுவானது. இங்கு எதுவும் தனிக்குழுவிற்குச் சொந்தமானது அல்ல. முயற்சி ஒருவரை நிச்சயம் திறமைசாலி ஆக்கும்.  வாய்ப்பு ஒருவரை வெற்றியாளராக மிளிரச் செய்யும். கோல்ஃப் துறையில் இந்திய விளையாட்டாளர்கள் அதிகரிக்க வேண்டும், அதற்கு நாம்தான் முயற்சி எடுக்கவேண்டும்!

விளம்பரம்:

 

(மகேன் வித்யாசாகர்)

சுங்கைபூலோ ஜூலை 22-

இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து, வலைப்பந்து போட்டிகளை 8 ஆண்டுகளாக கல்வி, சமூக மேம்பாட்டு அறவாரியம் (இ.டபள்யூ. ஆர்.எஃப்) நடத்திவரும் வேளையில், இம்முறை  ஆர்.ஆர்.ஐ தோட்டத் திடலில் நடத்தியது.

இடைநிலைப் பள்ளியில் பின் தங்கிய மாணவர்களை ஒன்றுபடுத்தி, அவர்களுக்கு உரிய  பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் அம்மாணவர்களைச் சந்தித்து கருத்தரங்கு, கல்வி, விளையாட்டுப் பயிற்சிகளை இலவசமாக இவ்வறவாரியம்  வழங்கிவருகிறது.

அம்மாணவர்களுக்கிடையே கால்பந்து, கூடைப்பந்துப் போட்டிகள் பெரிய அளவில்  ஆண்டு தோறும் நடத்தப்படும். அந்த வகையில் இவ்வாண்டு நடத்தப்பட்ட போட்டியில்  நாடு தழுவிய அளவில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்குகொண்டதாக கல்வி, சமூக அறவாரியத்தின் தலைவர்  நடராஜன் தெரிவித்தார்.

ஆண்கள்  கால்பந்து போட்டியிலும், பெண்கள் கூடைப்பந்து போட்டியிலும் கலந்துகொண்டு தங்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தினர்.

பொதுவாக இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முயற்சிகளை எடுத்து வருவதாகவும், இதற்கு முன் எங்கள் பயிற்சியில் ஈடுபட்டு சிறந்து விளையாடிய போட்டியாளர்கள்  மாநில அணிகளுக்கு விளையாடி வருவதாகவும் நடராஜன் தெரிவித்தார்.

இம்முறை நடத்தப்பட்ட போட்டியில் கால்பந்து விளையாட்டில்  சுபாங் யுனைட்டெட் அணியினர் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது இடத்தை இ.டபள்யூ. ஆர்.எஃப் மலேசிய அணியினரும், மூன்றாம் இடத்தை டிஎன் சூப்பர் ஸ்ட்ரைக்கர் அணியினரும், நான்காம் இடத்தை  காஜாங் தெர்மினேட்டர் அணியினரும் வாகை சூடினர்.

பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், பினாங்கு பிளாக்பேர்ல் அணியினர் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் இடத்தை  ஜெராய் என்சி அணியும், மூன்றாம் இடத்தை பினாங்கு ஒய்ட் பேர்ல் அணியும், நான்காம் இடத்தை லெம்பா பூஜாங்கும் பிடித்தனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்குத்  தலைவர் நடராஜன், முன்னாள் தலைவர் டத்தோ யோகேஸ்வரன், துணைத்தலைவர் கோவிந்தசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கினர்!

விளம்பரம்:

ஷங்காய் ஜூன்16-

 

கலப்பு தற்காப்புக் கலை வீரர்களுக்கான ஒன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று இரவு சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெற்றது.

 

இப்போட்டியில் மலேசிய இந்திய வீரரான அகிலன் தாணி ஜப்பானின் ஜாம்பவானான அகியாமாவை எதிர்த்துக் களமிறங்கினார்.

 

ஜப்பானின் வெட்ரன் வீரரான அகியாமா, கலப்பு தற்காப்புக் கலையில் முன்னணி வீரராகத் திகழ்பவர். பல போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர்.

 

43 வயதான அகியாமாவை எதிர்த்து, 23 வயது நிரம்பிய அகிலன் தாணி கலமிறங்குவது பலரது கவனத்தை ஈர்த்தது.

 

முதல் சுற்றில், பாயும் புலி போல் அகிலன் தாணி கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல யுத்திகளுடன், அதிவேகமாகத் தாக்குதலை நடத்தினார். இருந்தபோதும், முதல் சுற்றில் அகியாமாவை அகிலனால் வீழ்த்த முடியவில்லை. இரண்டாம் சுற்றில் சற்றுத் தோய்வடைந்த அகிலன், அகியாமாவின் தாக்குதலுக்கு முட்டுக்கொடுக்கச் சிரமப்பட்டார். ஆனாலும், அகிலன் அகியாமாவிடம் வீழ்வில்லை.

 

மூன்றாம் சுற்றில் பல வித்தைகளைக் களமிறக்கி ஒரு வேங்கையாய் மாறி, தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அகிலன் தாணி.

 

அகியாமாவிற்கும், அகிலன் தாணிக்கும் 20 வயது வித்தியாசம். எனவே, மூன்றாம் சுற்று இளைஞனுக்குச் சாதகமாக அமைந்தது. காரணம் 43 வயதான அகியாமா 3 வது சுற்றில் சற்றுச் சோர்வடைந்ததால், அகிலன் தனது நிலையை வலுப்பெறச் செய்தார்.

 

மூன்றாவது சுற்றில்,  2 சுற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய  அகிலன் தாணியை, போட்டியின் மூன்று நடுவர்களும் ஏகமனதாக வெற்றியாளராக அறிவித்தனர்.

 

இதன் வழி புதிய சரித்திரத்தை ஷங்காயில்  பதித்துள்ளார் நம் மண்ணின் மைந்தன் அகிலன் தாணி!

கோலாலம்பூர் ஜூன் 13-

மலேசியப் பூப்பந்துத் துறையின் செல்லப்பிள்ளையும்,  நாடே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய விளையாட்டு வீரருமான டத்தோ லீ சோங் வேய் இன்று தேசிய பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் கட்டடத்தில் இன்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவருடன்  இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர்  சைட் சாடிக் பின் சைட் அப்தூல் ரஹ்மான் உடனிருந்தார்.

இதுநாள் தமக்கு ஆதரவு வழங்கிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சுக்கும்,   பயிற்றுனர் மிஸ்புன் சீடேக் மற்றும்  எல்லா வகையிலும்  உதவியாக இருந்த தேசிய பூப்பந்து சங்கம் மற்றும் குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ லீ சோங் வேய் தெரிவித்தார்.

“19 ஆண்டு காலமாக எனது ஆட்டத்தை ரசித்து வற்றாத ஆதரவை வழங்கி என்னைக் கொண்டாடிய மலேசிய ரசிகர்களுக்கு நன்றி” என கூறும் போது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல்  கண்ணீர் விட்டு அழுதார் டத்தோ லீ. உடனே அங்கிருந்தவர்கள் லீ சோங் வேய் என்றும் மலேசிய  பூப்பந்துத் துறையின் ‘கிங்’ என உற்சாகம் ஊட்டினர்.

19 ஆண்டுகளாகப் பூப்பந்துத் துறையில் தேசிய அணிக்காக விளையாடிய டத்தோ லீ சோங் வேய், 3 முறை ஒலிம்பிக் போட்டியில்  மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று தந்தவர். பல போட்டிகளில் பங்குபெற்று பல முறை வெற்றியாளர் பட்டத்தை தக்க வைத்தவர். உலகப் பூப்பந்து விளையாட்டாளர்களின் தரவரிசையில் முதல் நிலை விளையாட்டாளர் எனும் மகுடத்திற்குச் சொந்தக்காரர். சில மாதங்களுக்கு முன் மூக்குப் புற்றுநோய் காரணமாக சிகிச்சைப் பெற்று ஓய்வில் இருந்த  டத்தோ லீ சோங் வேய், தற்போது மலேசியப் பூப்பந்துத் துறையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

ஒலிம்பிக் விளையாட்டில் பூப்பந்து போட்டியில் டத்தோ லீ சோங் வேய் தங்கம் வெல்வார் என்பது மலேசிய ரசிகர்களின் கனவு. ஒலிம்பிக்கில் தங்கத்தைப் பெற்றுத் தரவேண்டும் என்பது  லீ சொங் வேய்யின் நீண்ட நாள் தவம். ஆனால் இன்று அவரின் அறிவிப்பு மலேசியப் பூப்பந்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது!

கோலாலம்பூர் ஜூன் -3

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை 6-வது முறையாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை டோட்டன்ஹாமை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, லிவர்புல்  அணி வென்றது.

அந்த வெற்றியுடன் இன்று லிவர்புல் அணியின் 127-வது ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடவுள்ள நிலையில், லிவர்புல் அணியின் சென்டர் மிட்ஃபிளர் ஆட்டக்கார் ஜோர்டன் ஹண்டர்சன்,  வெற்றிக் கோப்பை மீது கால்  வைத்து  விமானத்தில் அமர்ந்த படி இருக்கும் படம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மேற்கத்திய விளையாட்டாளர்கள்  தாங்கள் வென்றெடுத்த கோப்பைகள் மீது கால் வைத்துப் படம்பிடிப்பது வழங்கம்.

அது அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. ஆனால்  பல ரசிகர்கள் தங்கள் அணிக்கு  இந்தக் கோப்பை கிடைக்காதா என்று ஏங்கிவருகிறார்கள்.  அப்படி இருக்க,  6 முறை கோப்பையை வென்ற லிவர்புல், பல ஆண்டுகளாக இந்தக் கோப்பைக்காகக் காத்திருந்த லிவர்புல், அத்தகைய மாபெரும் கோப்பையை மதிக்கும் லட்சணம் இதுதானா? என்று சமூகவலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள் ரசிர்கள். இதனால்  சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜோர்டன் ஹண்டர்சன்.

இப்படிபட்ட சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. பல புகழ் பெற்ற ஆட்டக்காரர்கள் இப்படித் தாங்கள் வென்ற கோப்பை மீது கால் வைத்துப் படம்பிடித்துள்ளனர். அது மேற்கத்திய விளையாட்டாளர்களின் பாணி.

இருந்தாலும், இந்தக் கோப்பைக்கு மரியாதை கொடுக்கும்படி பல ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, தங்கள் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.

இனி இப்படிச் சம்பவம் நடக்காமல் விளையாட்டாளர்கள் பார்த்துக்கொள்வார்களா?

கோலாலம்பூர் ஜூன் 3-

ஜப்பான் ஜாம்பவான் என அழைக்கப்படும் அகியாமாவுடன் மலேசிய வீரர் அகிலன் தாணி மோதவிருப்பது உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலப்பு தற்காப்பு கலை வீரர்களுக்கான ஒன் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் 15-ஆம் தேதி சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் மலேசிய இந்திய வீரரான அகிலன் தாணி களமிறங்கவுள்ளார். இவர் ஜப்பானின் ஜாம்பவான் வீரரான அகியாமாவை எதிர்த்துக் களமிறங்கவுள்ளார்.

ஜப்பானின்  அகியாமா கலப்பு தற்காப்புக் கலையில் முன்னணி வீரராகத் திகழ்பவர்

அதே வேளையில் பல போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்துள்ளார்.

அவருடன் அகிலன் தாணி மோதுவது கலப்பு தற்காப்பு கலை போட்டியின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேசிய வீரரான அகிலன் தாணி, பல முதன்மைப் போட்டிகளில் களமிறங்கி வெற்றிக்காகப் போராடி வெற்றியைப் பெற்றுள்ளார். அதே வேளையில், பல தோல்விகளையும் சந்தித்துள்ளார்.

தற்போது ஜப்பான் வீரர் அகியாமாவுடன் மோதுவது அவருக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும் அந்தச் சவால்கள் அனைத்தையும் முறியடித்து வெற்றிக் கனியைப் பறிப்பேன் என்று அகிலன் தாணி செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்காகப் பல மாதங்களாகக் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வரும் அகிலன் தாணிக்கு பிரேசிலைச் சேர்ந்த பயிற்றுநர் பயிற்சி வழங்கி வருகிறார்.

அகியாமா ஜாம்பவான் வீரராகத் திகழ்ந்தாலும், அது குறித்து எந்தவொரு சிந்தனையும் எனது மனதில் இல்லை.

அவரும் ஒரு வீரர். அவரை வீழ்த்துவது எப்படி என்ற வியூகத்தை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று அகிலன் தாணி கூறினார்!

(சசிதரன் தர்மலிங்கம்)

நெதர்லாந்து மே 9-

ஐரோப்பிய வெற்றியாளர்கள் லீக் கிண்ண இறுதி ஆட்டத்திற்கு நுழைய வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த லிவர்பூல் அணி, நேற்று அதிரடியாக பார்செலோனாவை வீழ்த்தி அந்தக் கனவை நிறைவேற்றியுள்ளது.

இன்று அதிகாலை அஜெக்ஸ் அரங்கில் நடந்த மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் கனவா? இல்லை நிஜமா? என்று நினைக்கும் அளவிற்கு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 90-வது நிமிடம் வரை இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அஜெக்ஸ்  அணியிடம் இருந்தவேளை, அந்த இறுதி நிமிடம் செலுத்தப்பட்ட கோல் சரித்திரத்தை மாற்றி எழுதியது.

கடந்த வாரம் டோட்டன்ஹம் தனது சொந்த அரங்கில் அஜெக்ஸிடம் 1-0 என்று தோல்வி கண்ட நிலையில், இன்று அதிகாலை நடந்த 2-வது அரை இறுதி ஆட்டத்தில், 5-வது நிமிடம், 35-வது  நிமிடங்களில், அஜெக்ஸ் கோல்களைப் புகுத்தி  3-0 என்று தங்களது முன்னிலையை வலுவாக்கியது.

முதல் பாதி ஆட்டம் அஜெக்ஸ் வசம் இருந்தாலும், பிற்பாதி ஆட்டத்தின் போது டோட்டன்ஹம் ஆட்டக்காரர் லுகாஸ் மோரா 55 - 59-வது நிமிடங்களில் அடித்த கோல் டோட்டன்ஹம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

2-2 என்ற நிலையில் அந்த ஆட்டம் சமநிலை கண்டாலும், தனது சொந்த அரங்கில் அஜெக்ஸுக்கு வெற்றியைத் தந்த அந்த ஒரு கோல், அவர்களை  முன்னிலையில் வைத்திருந்தது.

கடுமையான முயற்சிக்குப் பிறகு, ஆட்டம் முடிவடையச் சில நிமிடங்களே எஞ்சியுள்ள தருணத்தில், லுகாஸ் மோரா அடித்த அந்த முன்றாவது கோல், எதிரணி அரங்கில் டோட்டன்ஹமிற்கு வெற்றியைத் தந்தது .

இவ்விரு ஆட்டத்தை ஒப்பிடுகையில் 3-3 என்ற கோல் எண்ணிக்கையில், இரு அணிகளும் சமநிலை கண்ட வேளையில், எதிர் அணியின் அரங்கில் அதிகமான கோல்களைப் புகுத்திய டோட்டன்ஹம் இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றது.

இம்முறை இங்கிலாந்தைச் சேர்ந்த இரு அணிகள் ஐரோப்பிய வெற்றியாளர்கள் லீக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவதால், இம்முறை அக்கிண்ணம் இங்கிலாந்தை நோக்கிச் செல்கிறது என்பது உறுதியாகிறது.

கடும் போராட்டத்திற்குப் பிறகு இறுதி ஆட்டத்தில் சந்திக்க உள்ள லிவர்பூல் -டோட்டன்ஹம் ஆகிய இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் இல்லை என்பதால், வரும் ஜூன் 2-ஆம் தேதி அதிகாலையில் நடக்கவிருக்கும் இறுதி ஆட்டம், கடைசி நிமிட விசில் அடிக்கும் வரை சுவாரஸ்யமாகவும், கடுமையாகவும் இருக்கும் என்பது உறுதி. அந்தக் கடைசி நிமிட விசிலுக்காகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள், உற்சாகமாய்!

கோலாலம்பூர், மே -

அடிரா கல்பந்து கிளப் ஏற்பாட்டில் வரும் மே 18-ஆம் தேதி சுங்கை பூலோ ஐபிஜி அனைத்துலகப் பள்ளியில் பெனால்டி கிக் லீக் போட்டி நடைபெறவுள்ளது.
முதல் முறையாக நடத்தப்படும் இப்போட்டியில் அதிகமான அணிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. பெனால்டி கிக் போட்டியை லீக் முறையில் நடத்தி வெற்றியாளர்களுக்குப் பல்வேறு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
முதல் நிலை வெற்றியாளருக்கு 2,000 வெள்ளி, இரண்டாம் நிலைக்கு 1,000 வெள்ளி, மூன்றாம் நிலைக்கு 500 வெள்ளி, நான்காம் நிலைக்கு 300 வெள்ளி ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
அதோடு சிறந்த கோல் கீப்பருக்கு 100 வெள்ளியும், சிறந்த கோல் வீரருக்கு 100 வெள்ளியும் காத்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு குழுவில் நான்கு பேர் இருத்தல் அவசியம். லீக் முறை என்பதால் முதல் - இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் அடுத்தச் சுற்றுக்கு தேர்வு பெறுவர். 
போட்டியில் பங்கெடுக்க விரும்பும் குழுக்கள் வரும் 14 -ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 
மேல் விவரங்களுக்கு சோமு (012-9057025) சர்வேஸ் (014- 6226265) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்!

(சசிதரன் தர்மலிங்கம்)

அன்ஃபீல்ட் மே 8-

ஐரோப்பா வெற்றியாளர்கள்  கிண்ண அரை இறுதியின் இரண்டாம் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் அரை இறுதி ஆட்டத்தில் பார்செலோனா-வின்  சொந்த அரங்கில்  லிவர்பூல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடந்து லிவர்பூல் மீது மற்ற அணியின் ரசிகர்கள்  ‘மீம்ஸ்’ உருவாக்கி  கடந்த வாரம் முழுவதும் லிவர்பூல் ரசிகர்களை வறுத்து எடுத்தனர். அதுமட்டுமின்றி வெற்றியாளர்கள் கிண்ணத்தை வாகை சூடும் லிவர்பூல் அணியின் கனவை பார்செலோனா ஆட்டக்காரர்  மெஸ்சி கலைத்துவிட்டார் என்றும் செய்திகள் பரபரப்பாகின.

 

சோன முத்தா போச்சா?

லிவர்பூல் ரசிகர்கள் , தங்கள் அணியைத் தற்காத்துக்கொள்ள அந்த அணிக்கு ஆதரவாக அன்ஃபீல்டில் பதிலடி கொடுப்போம் என்று ஆதரவு பதிவை  வெளியிட்டபோது, அதற்கும்   வடிவேல் பாணியில்  லிவர்பூல் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பது போல் ‘மீம்ஸ்’  உருவாக்கி,  

‘இன்னுமாடா இந்த ஊர் நம்பள நம்புது’ன்னு   கேலி கிண்டல்களைத் தட்டிவிட்டனர்.

ஆனால், இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் 4-0 என்று  லிவர்பூல் அணி பார்செலோனா அணிக்கு ‘மாஸான’ பதிலடியைக் கொடுத்து, ஐரோப்பிய வெற்றியாளர்கள் கிண்ண இறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெற்று அசத்திவிட்டது.

இதனை அடுத்து, லிவர் பூல்  ரசிகர்கள்  உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். 2005-ல் லிவர்பூல் அணி செய்த அதிரடியைப் போல், மீண்டும் யாரும் எதிர்பார்க்காத ஓர் அதிரடியை லிவர்பூல் செய்துள்ளது.

ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் ஒரிகி அடித்த கோல், அரங்கை அதிர வைக்க 1-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி ஆட்டம் முடிந்தது.

தங்கள் அணியைச் சமநிலைப்படுத்த இன்னும் இரண்டு கோல் தேவை என்ற பதற்றத்தில் இருந்த லிவர்பூல், ரசிகர்களை ஏமாற்றாமல் இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்த 54-வது  நிமிடத்தில் வைனால்டோ அடித்த கோல் அரங்கை அதிர வைத்தது. அந்தச் சத்தம் அடங்குவதற்குள் 56-வது நிமிடத்தில் வைனால்டோ அடித்த இரண்டாவது கோல், லிவர்பூல் மீண்டு வந்துவிட்டது என்ற சரிதிரத்தை ரசிகர்கள் கொண்டாடிய நொடியானது. அதன் பின் 79-வது நிமிடத்தில்  லிவர்பூல் அணிக்குக்  கிடைத்த கோர்னர் கிக்கை மிகச் சாதுரியமாக லிவர்பூல் பயன்படுத்தி, அதையும் வெற்றி கோலாக மாற்றினார் ஒரிகி.  தனது சொந்த அரங்கில்  கடந்த வாரம் தங்களை வீழ்த்திய பார்செலோனா அணிக்குப் பதில் அடி கொடுத்து, ‘நான் வீழ்வேன் என்று நினைத்தயோ?’ என,  தனது பலத்தைக் காட்டி 4-3 என்ற கோல் கணக்கில் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றுள்ளது லிவர்பூல்.

இதனிடையே நேற்று அதிகாலை தொடங்கி சமூக வலைத்தளமான பேஸ்புக், டிவிட்டர் முழுக்க லிவர்பூல் வண்ணமாகவே மிளிர்கிறது. லிவர்பூல் ரசிகர்கள் ஒட்டுமொத்த இணையத்தையே ஆக்கிரமித்துள்ளனர்!

(ரமேஸ்வரி)

கம்பார், மே. 5 :

கம்பார் தமிழ்ப்பள்ளியின் 47-வது விளையாட்டுப் போட்டி, பள்ளி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

கல்வி மட்டுமின்றி எல்லா ரீதியிலும் பள்ளி சிறந்து விளங்குவதோடு, பல சாதனைகளையும் தொடர்ந்து புரிந்து வருகிறது என, பள்ளியின் தலைமையாசிரியர் மு. அர்ஜுனன் தெரிவித்தார்.  கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என அவர் பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டார். பள்ளியின் வெற்றிக்கும் திட்டங்களுக்கும் தொடர்ந்து துணை நிற்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் கழகத்தினர் மற்றும் நன்கொடையாளர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

நடைபெற்ற அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும்  மாணவர்கள் உற்சாகமாகப் பங்குபெற்று திறமையை வெளிப்படுத்தினர்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெகன், முன்னாள் மாணவர் கழகத் தலைவர் சந்திரசேகரன், வட்டாரப் பிரமுகர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என திரளானோர் பங்குபெற்று விழாவிற்குப் பெருமை சேர்த்தனர்!

 

(ரமேஸ்வரி)

தாப்பா  ஏப். 16 : 
 

விளையாட்டுதானே என மாணவர்களும் பெற்றோர்களும் அதில் கவனம் செலுத்தாமல் இருந்துவிடக்கூடாது. விளையாட்டும் வாழ்க்கையை ஜெயிக்க வைக்கும் என்பதைப் பல விளையாட்டு சாதனையாளர்கள் நிரூபித்துள்ளனர் என, தாப்பா நிர்மல் நிறுவனத்தின் உரிமையாளரும் சமூகச் சேவையாளருமான தொழில் முனைவர் தொண்டர்மணி சு. நாகையா கருத்துரைத்தார்.

இங்குள்ள தாப்பா தமிழ்ப்பள்ளியின் 60-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து மேலும் பேசிய அவர, ஆசிரியர்கள் மாணவர்களுக்காகத் தங்களை அர்ப்பணித்து பணிகளை ஆற்றிவரும் வேளையில், பெற்றோர்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

எந்த அளவு கல்வி முக்கியமோ அதே அளவு விளையாட்டும் புறப்பாட நடவடிக்கைகளும் முக்கியமாகிறது எனப் பள்ளியின் தலைமையாசிரியர் அ. வனஜா தமது தலைமையுரையின்போது குறிப்பிட்டார். தற்போதைய கல்வி திட்டத்தில் மாணவர்கள் புறப்பாட நடவடிக்கையிலும் சிறந்த நிலையைக் கொண்டிருத்தல் அவசியம் என தெரிவித்த அவர், பள்ளி அதற்கான ஆக்ககர திட்டங்களை மேற்கொண்டு வருகிறது எனவும் கருத்துரைத்தார்.

நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் உற்சாகமாகப் பங்குபெற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இவ்விழாவில் மாவட்ட கல்வி இலாகாவின் விளையாட்டு பொறுப்பதிகாரி ஷாருல், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குமரகணேஷ், அதன் பொறுப்பாளர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்!

 

 

இங்கிலாந்து பிரிமியர் லீக்!
செல்சி - மென்சஸ்டரை பின்னுக்குத் தள்ளுமா அர்ஸ்னல்?

(சசிதரன் தர்மலிங்கம்)

நாளை (செவ்வாய்க் கிழமை) அதிகாலை அர்ஸ்னல் வாட்ஃபொட் அணியுடன் மோதுகிறது. இவ்வாட்டதில் அர்ஸ்னல் அணி வெற்றிபெற்றால் தற்போது புள்ளிப் பட்டியலில் 6-வது நிலையில் உள்ள அர்ஸ்னல்,  66 புள்ளி மதிப்பில் நான்காவது இடத்தில் உள்ள செல்சி அணியுடன் சமநிலை காணும் பட்சத்தில், கோல் எண்ணிக்கையில் அர்ஸ்னல் நான்காவது இடத்தைப் பிடித்து செல்சி, மென்சஸ்டர் யுனைடெட் அணிகளைப் பின்னுக்குத் தள்ளும்
வாய்ப்பு உள்ளது. அதனால் அதிகாலை நடக்கவிருக்கும் ஆட்டத்திற்கு அர்ஸ்னல் ரசிகர்கள் பரபரப்போடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே  நேற்று நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், சிட்டி 3-1 கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸ்சை வீழ்த்திய வேளையில், லிவர்புல் 2-0 கணக்கில் இங்கிலாந்தின் மற்றொரு ஜாம்பவனான செல்சியஸை வீழ்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடட், வெஸ்டம்மை 2-1 கணக்கில் விழ்த்தி 5-ஆம் இடத்தைப் பிடித்த வேளையில், தோத்தனம் 4-0 கணக்கில் அடர்ஸ்ஃபில்டை வீழ்த்தி 3-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது!

(மகேன்)

காஜாங் பூப்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக தேசிய ரீதியில் இந்தியர் பூப்பந்து விளையாட்டு போட்டி நடைபெறவிருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் 20 -21 ஆகிய தேதிகளில் காஜாங் ஹொகியான் அசோசெஸன் தளத்தில்  நடக்கவிருக்கும்  இப்போட்டி,  இந்தியர்களிடையே மறைந்துள்ள விளையாட்டுத் திறமையை அடையாளம் காணும் விதமாக நடத்தப்படுகிறது. 

மொத்தம் 13 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியின் மூலம் மொத்தம் 20 ஆயிரம் வெள்ளி பரிசுத் தொகையை, போட்டியில் பங்கு கொள்ளும் வெற்றியாளர்கள் தட்டிச் செல்லவிருக்கின்றனர்.  போட்டிப் பிரிவுகளுக்கு ஏற்ப வெற்றியாளர்களுக்கு இப்பரிசு  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அவ்வியக்கத்தின் தலைவர் வேலாயுதம் தெரிவித்தார்.  10 வயது முதல் 70 வயது வரை உள்ள மலேசியா வாழ்  இந்தியர்கள்  எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தப் போட்டியில் பங்கு பெறலாம் என வேலாயுதம் தெரிவித்தார். இந்தப் போட்டியில் பங்கு கொள்ள  நுழைவுக் கட்டணம் உண்டு.

பள்ளி  மாணவர்களுக்குச் சிறப்பு நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல்  18 வயதிற்கு மேற்பட்டோருக்குத் தனி கட்டணம் நிரணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இப்போட்டியை  காஜாங் பூப்பந்து சங்கம் நடத்தியபோது, சுமார் 430 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். இம்முறை ஏற்பாட்டுக் குழுவினர் 500 போட்டியாளர்களை எதிர்பார்ப்பதாகக் கூறும் வேலாயுதம், இந்தப் போட்டியின் நோக்கம் திறமைசாலிகளை ஆதரிப்பது மற்றும்  பூப்பந்து அரங்கம் அமைத்து  இந்திய மாணவர்களுக்குக் குறைந்த விலையில் பயிற்சி வழங்குவதே என்கிறார். இப்போது எங்கள் இயக்கத்தின் கீழ் 5 பயிற்றுனர்களைக் கொண்டு 40 மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளோம் என வேலாயுதம் கூறினார்

விளையாட்டுப் பிரியர்கள், குறிப்பாகப் பூப்பந்து பிரியர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் இருந்தால், கீழ்க்காணும்  எண்களில் தொடர்பு கொண்டு, மேல் விபரங்கள் பெறலாம்.

017-3281537 / 019-2259717

Recent News